குமாரபாளையத்தில் பட்டதாரி பெண் மாயம்: கிரைம் செய்திகள்..
பைல் படம்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் சசிகுமார், (46). இவரது 21 வயது மகள் பி.எஸ்.சி. பட்டதாரி. படிப்பு முடித்து வீட்டில் இருந்து வருகிறார். நேற்று காலை 11:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒரு வாலிபனிடம் பேசிக்கொண்டு இருந்ததாகவும், அவன் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவன் என்று தெரிய வருவதாகவும் கூறியுள்ளார். காணாமல் போன மகளை கண்டுபிடித்து தருமாறு குமாரபாளையம் போலீசில் புகார் கூறியுள்ளார்.
தனியார் நிறுவன ஊழியரை பாட்டில், செங்கல்லால் தாக்கிய மூவர் கைது
குமாரபாளையம், திருவள்ளுவர் நகர் பகுதியில் வசிப்பவர் முருகேசன், (27). தனியார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவன பணியாளர். இரண்டு நாட்களுக்கு முன்பு சரவணா தியேட்டர் முன்பு உள்ள டாஸ்மாக் கடைக்கு போகும்போது, அங்கிருந்த மிராண்டா செந்தில், (35), என்பவர் காரணம் இல்லாமல் அடித்துள்ளார். அதனால் அங்கிருந்து மிரண்டா செந்திலை தள்ளிவிட்டு தப்பி ஓடி வந்தார். நேற்று மாலை 05:00 மணியளவில், சரவணா தியேட்டர் எதிரில், சொந்த வேலையின் காரணமாக முருகேசன் செல்ல, அங்கு மிராண்டா செந்தில், அருண், (34), மேட்டூர் செல்வம், (38), ஆகிய மூவரும் அங்கிருந்துள்ளனர். முருகேசனை கண்டதும், பாட்டில்களை உடைத்து மிரண்டா செந்தில் மற்றும் மேட்டூர் செல்வம் ஆகியோர் முருகேசனின் தலை உள்ளிட்ட பல இடங்களில் பலமாக தாக்கினர்.
மேலும் அருண் செங்கல்லை எடுத்து முருகேசனின் தலையில் தாக்க, இரத்தகாயங்கள் ஏற்பட்டது. முருகேசன் அலறல் சத்தம் கேட்டதும், அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வர, மூவரும் தப்பியோடினர். முருகேசனை, அவரது நண்பர் செல்வகுமார் குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் சிகிச்சைக்கு சேர்த்தார். முருகேசன் கொடுத்த புகாரின்படி, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.
மரக்கட்டில் காலால் கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழப்பு
குமாரபாளையம் அருகே அருவங்காடு பகுதியில் வசிப்பவர் மாது, (58). தறி கூலி. மகன் அருணாசலம், (28), உடன் வசித்து வருகிறார். இவர் குடிபோதையில் அடிக்கடி தன் மனைவி பொன்னம்மாள், (50), வசம் சண்டை போடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு வெளியூர் சென்றுவிட்டு வந்த தன் தந்தையை பார்த்த இவர், இவரது அறையில் உள் தாழ்பாள் போட்டு தூங்கி விட்டார். வீட்டிற்கு வந்த மாது, வழக்கம் போல் தன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், மரக்கட்டில் காலை உடைத்து, அதில் மனைவியை பலமாக தாக்கியுள்ளார். அம்மாவின் அலறல் சத்தம் கேட்ட மகன், அருணாசலம், (28), நேற்று அதிகாலை 01:00 மணிக்கு எழுந்து பார்த்த போது, அவரது அறைக்கதவு வெளியில் தாழ்பாள் போடப்பட்டு இருந்தது. பக்கத்து வீட்டுக்காரரை எழுப்பி, கதவை திறக்க சொல்லி பார்த்த போது, அப்பா மாது, கட்டில் காலுடன், உன் அம்மாவை அடித்து கொண்டுவிட்டேன், நானும் குருணை மருந்து சாப்பிட்டு விட்டேன், என்று கூறியுள்ளார். இருவரையும் குமாரபாளையம் ஜி.ஹெச். அழைத்து வர, பொன்னம்மாள் இறந்து விட்டதாக டாக்டர் கூறினார். உயிருக்கு போராடி வரும் மாது, சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மகன் அருணாசலம் கொடுத்த புகாரின் படி, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பெண்ணிடம் பையுடன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, சிவசக்தி நகரில் வசிப்பவர் சுசிலா, (45). தன் தந்தையின் உடல்நிலை சரியில்லாத நிலையில் அவருக்கு வைத்தியம் செய்ய, தனது இரண்டரை பவுன் தங்க நகையை அடகு வைக்கவேண்டி, ஒரு பையில் நகையை போட்டுக்கொண்டு, வங்கிக்கு போக, புறவழிச்சாலை, அமிர்தா அபார்ட்மெண்ட் பகுதியில் காலை 09:00 மணியளவில் நடந்து சென்றார். அப்போது இவரை பின்தொடர்ந்த வந்த டூவீலரில் பின்னால் உட்கார்ந்து வந்த நபர், இவரது கையில் இருந்த பையை பிடுங்கி சென்றார். அந்த பதட்டத்தில் தந்தையை காப்பாற்ற வேண்டும் என மருத்துவமனைக்கு சென்று விட்டார்.
சிகிச்சை முடிந்து வீட்டிற்கு தந்தையை அழைத்து வந்த பின், நடந்த சம்பவத்தை குமாரபாளையம் போலீசில் சொல்லி, பறித்து சென்ற நகையை மீட்டு, குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி , குமாரபாளையம் போலீசில் புகார் கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu