பிப். 17ல் விசைத்தறி தொழிலாளர்களின் இறுதி கட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை

பிப். 17ல் விசைத்தறி தொழிலாளர்களின் இறுதி கட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை
X

விசைத்தறி.

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் பல கட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையொட்டி இறுதி கட்ட பேச்சுவார்த்தை பிப். 17ல் நடைபெறும் என தாசில்தார் தெரிவித்துள்ளார்.

நாம்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி பிப். 1 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளது.

பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. ஜவுளி உற்பத்தியாளர்கள் பலர் ஊரில் இல்லை என்று காரணம் கூறி, பேச்சுவார்த்தை தள்ளிக்கொண்டே சென்றது. பிப்.11ல் உடன்பாடு ஏற்படாததால், ஆத்திரமடைந்த விசைத்தறி தொழிலாளர்கள் தாலுக்கா அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து, கூலி உயர்வு வழங்காத ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்புத்தறி உரிமையாளர்களை கைது செய், என்று கண்டன கோஷமிட்டனர். நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் இருதரப்பினரிடம் பேசி, பிப். 13ல் இறுதி கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி அறிவிக்கப்படும் என தொழிலாளர்கள் மத்தியில் உறுதி கூறினார். இதனால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில் தொழிற்சங்க நிர்வாகிகள், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் விஜய்கண்ணன் கலந்து பேசி பிரச்சனையை ஓரளவு தீர்வுக்கு கொண்டுவந்துள்ளார்.

இதுகுறித்து குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேல் கூறுகையில், விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், ஜவுளி உற்பத்தியாளர்கள், அடப்பு தறி உரிமையாளர்கள் ஆகியோருடன் இறுதி கட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை பிப். 17ல் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது பற்றி விசைத்தறி தொழிலாளர்கள் தொழிற்சங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணி கூறுகையில், பிப்.17ல் இறுதி கட்ட கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதால் தொழிற்சங்கங்கள் சார்பில் பிப்.14ல் சடையம்பாளையம் காந்திநகர், உழவர் சந்தை, பிப்.15ல் ராஜம் தியேட்டர் அருகில், கே.ஓ.என்.தியேட்டர் அருகில், பிப்.16ல் பாலிக்காடு, அம்மன் நகர் ஆகிய இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!