குமாரபாளையத்தில் முப்பெரும் விழா : சுயேச்சை வேட்பாளர் பங்கேற்பு

குமாரபாளையத்தில் முப்பெரும் விழா :  சுயேச்சை வேட்பாளர் பங்கேற்பு
X
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் சுயேச்சை வேட்பாளர் பங்கேற்று வாக்குறுதி அளித்தார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவில் உள்ள லட்சுமி மஹாலில் அனைத்து சமுதாய ஒற்றுமை குடும்ப விழா,அனைத்து சமுதாய பெருமக்களை கவுரவிக்கும் விழா,குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு கலந்தாய்வு விழா என்று முப்பெரும் விழா நடைபெற்றது.


இந்த முப்பெரும் விழாவில் குமாரபாளையம்,பள்ளிப்பாளையம்,பகுதியை சேர்ந்த தேவாங்கர்,முதலியார், கவுண்டர், தெலுங்கு செட்டியார்,குயவர் உள்ளிட்ட சமுதாயத்தை சேர்ந்த அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஓம் சரவணா பங்கேற்று அனைத்து சமுதாய மக்களிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது மக்கள் சார்பாக அவரிடம் தொகுதி வளர்ச்சிக்காகவும், சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவும் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அந்த கோரிக்கைகளின் அடிப்படையில் சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா பதில் அளித்தார். 'தேர்தலில் என்னை வெற்றி பெற வைத்தால் எனது 5 ஆண்டு பதவிக்காலத்திற்குள் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் புதிய தொழில், வேலை புதிய வாய்ப்புகளையும், தொழில் முனைவோர்களை அதிக அளவில் உருவாக்குவேன். வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்கும் வகையில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை கொண்டு வருவேன். விசைத்தறி தொழில் அழிந்துபோகாமல் அதை பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்.' என்று உறுதி அளித்தார்.

இதேபோன்று குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிநீர், பொதுக்கழிப்பிடம் தார்சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களின் தலைவர்களை சால்வை அணிவித்து சுயேச்சை வேட்பாளர் ஓம் சரவணா கவுரப்படுத்தினார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!