நாய்கள் சண்டையால் விபத்து: ஒருவர் படுகாயம்

பைல் படம்
குமாரபாளையத்தில் நாய்கள் சண்டையால் விபத்து ஏற்பட்டு ஒருவர் படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் அருகே காந்தி நகர் பகுதியில் வசிப்பவர் பாலமுருகன்(35.) டூவீலர் மெக்கானிக். நேற்றுமுன்தினம் இரவு 10:30 மணியளவில், பள்ளிபாளையம் சாலை, பெருமாபாளையம் பகுதியில் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது நாய்கள் சண்டை போட்டு கொண்டு இவரது டூவீலரில் வந்து மோத, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். இவர் பெருந்துறை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
அனைத்து பகுதியிலும் தெரு நாய்கள் அதிகம் ஆனதால், பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். நகராட்சி நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: முன்பெல்லாம் தெரு நாய்களைப் பிடித்து வண்டியில் அடைத்துக் கொல்வதற்கு முனிசிபாலிடி நிர்வாகம் வழிவகை செய்தது. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பாக ஜனதா தள மத்திய அரசில் மேனகா காந்தி அமைச்சராக இருந்தபோது, நாய்களைக் கொல்வது விலங்குகளுக்குக் கொடுமை இழைப்பதாகும் என்ற சாக்கில் அவ் வழக்கம் தடை செய்யப்பட்டது. ஆனால், நாய்க்கடி வியாதியால் பீதியில் தவித்து மரணமடையும் மனிதர்களைப் பற்றியும் நாம் கவலைப்பட வேண்டும். இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 30,000 பேர் நாய்க்கடியால் இறந்து போகிறார்கள் என்று பெங்களூரு கெம்பகௌடா இன்ஸ்டிட்யூட் அறிக்கையொன்று கூறியுள்ளது.
நாய்களுக்குத் தடுப்பு ஊசி, கருத்தடை போன்ற வழிமுறைகள் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பது போன்றவையே ஆகும். மிகச் சுலபமான வழி தெரு நாய்களை கொடூரமற்ற முறையில் சாகடிப்பது மட்டுமே. இதற்கு "ஸ்ட்ரைச்நைன்' என்ற மிக மலிவான ஊசி மருந்து மிகச் சிறந்தது என்று விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன்பே சிபாரிசு செய்துள்ளனர். ஊசி ஏற்றிய ஐந்தே நிமிடத்தில் நாய் அவஸ்தையின்றி செத்துவிடுமாம். இதற்கு வெளிநாடுகளில் "கக்ஸினைல் க்ளோலின்' என்ற விஷ ஊசி மருந்து உபயோகிக்கப்படுகிறது. ஆனால், விலை மிக அதிகம். மேலும், பின் சொன்ன மருந்து இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu