குமாரபாளையத்தில் சபரி மலை செல்ல மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்

குமாரபாளையத்தில் சபரி மலை செல்ல மாலை அணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்
X

குமாரபாளையம் அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர்.

குமாரபாளையம் ஐயப்பன் கோவிலில் சபரி மலை செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.

குமாரபாளையம் ஐயப்பன் கோவிலில் சபரி மலை செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.

கேரளா மாநிலம் சபரி மலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதம் துவங்குவது வழக்கம். இந்த ஆண்டு விரதம் துவங்க கார்த்திகை முதல் நாளான நேற்று அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் குருசாமியிடம் மாலை அணிந்து கொண்டனர்.

இவர்கள் பெரும்பாலும் 48 நாட்கள் விரதமிருந்து சபரி மலை சென்று ஐயப்பனை தரிசித்து வருவார்கள். ஐயப்பனை தரிசித்து வந்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐயப்ப பக்தர்கள் நம்பிக்கை. இதனால் ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. குமாரபாளையம் அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் டிச. 25ல் பிரம்மோத்சவ விழா நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

ஐயப்ப விரத மகிமை குறித்து ஐயப்ப குருசாமி சுப்பிரமணி கூறியதாவது:

ஐயப்ப பக்தர்களுக்கு ஐப்பசி மாதம் வந்துவிட்டாலே, எப்போது தான் இந்த ஐப்பசி மாதம் முடியும் என்று ஏக்கத்துடன் காத்திருப்பார்கள். இதாவது பரவாயில்லை. பெரும்பாலான பக்தர்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து மலையை விட்டு கீழே இறங்கிய உடனே, அடடடா... அதற்குள் தரிசனம் முடிந்து இறங்கி விட்டோமே, ஐயப்பனை மீண்டும் தரிசிக்க இன்னும் 365 நாட்கள் காத்திருக்க வேண்டுமா என்று ஆதங்கப்படுவார்கள்.

சில பேர், மலையை விட்டு இறங்கி வீட்டுக்கு வந்த உடனேயே, திரும்பவும் மாலை போட்டு விரதம் இருந்து மீண்டும் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்துவிட்டு வருவார்கள். இன்னும் சிலர் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று மலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்துவிட்டு வருவதுண்டு. அதற்கு காரணம், முதல் தடவை சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்கும்போதே, ஐயப்ப பக்தர்களின் மனதில் எழும் உணர்ச்சிப்பெருக்கு, அதெல்லாம் எழுத்தில் வடிக்க முடியாத அற்புதமான ஆன்மீக உணர்வு தான். அதையெல்லாம் அனுபவித்தால் தான் நாமும் அந்த உணர்வுகளை பெற முடியும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு முதன் முறையாக மாலை போடுபவர்களை கன்னிச்சாமி என்று சொல்வார்கள். கன்னிச்சாமிகள் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணியும்போது, கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகும். போகிற போக்கில் மாலையணிந்து ஐயப்பனை தரிசிப்பது என்பது கூடவே கூடாது. ஐயப்பனுக்கு விரதம் இருக்க விரும்பினால், அவர் பல முறை சபரிமலைக்கு சென்று வந்த குருசாமியாக இருந்தாலும் சரி, அல்லது முதல் முறையாக கன்னி சாமியாக மாலை போட்டு மலையேறுபவராக இருந்தாலும் சரி, கண்டிப்பாக 41 நாட்கள் விரத விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.

இன்னும் சிலர் கார்த்திகை 1ஆம் தேதி ஆரம்பித்து தை மாதம் 1ஆம் தேதியன்று மகர ஜோதி தரிசனத்தை காணும் வரையிலும் கடுமையான விரதத்தை கடைபிடிப்பார்கள். அதுதான் ஐயப்பனுக்கு விரதம் இருப்பதிலேயே மிகச் சிறந்த விரதமாகும். சபரிமலை ஐயப்பனை தரிசிக்க முடிவெடுத்துவிட்டால், மாலையணிந்து விரதம் இருப்பதற்கு முன்பாக முதலில் தன்னுடைய அப்பா, அம்மா மற்றும் தன்னுடைய குருசாமியிடம் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தகவல் தெரிவித்து அனுமதி வாங்கிவிட வேண்டியது அவசியமாகும். அதே போல், மாலையை கோவிலிலோ அல்லது தன்னுடைய தாயாரின் முன்னிலையிலோ மாலையணிந்து அவரின் ஆசியை வாங்க வேண்டும். மாலையை தேர்வு செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும். மாலை துளசி மாலையையும், ருத்ராட்சி மாலையையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மாலைகளில் கண்டிப்பாக 108 மணிகள் இருக்கவேண்டியது கட்டாயமாகும். ஐயப்பன் ஹரிஹர புத்திரன் என்பதால், துளசி மற்றும் ருத்ராட்சம் என இரண்டு மாலையையும் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.

மாலை செம்பு, வெள்ளியால் ஆனதென்றால், பல ஆண்டுகளுக்கு அணிந்து பயன்படுத்திக்கொள்ள முடியும். மாலையை அணிவதற்கு முன்பாக பூஜையறையில், சுத்தமான பசும்பாலில் ஊறவைக்க வேண்டும். மாலை அணியும்போது கீழ்கண்ட ஐயப்பனின் மூல மந்திரத்தை மனதார சொல்ல வேண்டும்.

மாலையணிந்த பின்னர், தினந்தோறும் அதிகாலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு, பூஜையறையில் ஐயப்பன் முன் நின்றுகொண்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்க வேண்டும். பின்பு தொடர்ந்து 108 முறை சபரிமலை ஐயப்பனின் சரண கோஷத்தை சொல்லி பூஜையை முடிக்க வேண்டும். ஐயப்ப சுவாமியே, மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும் தெரிந்தும் தெரியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து காத்து, பதினெட்டு படிகளையும் ஏறச்செய்து நல்ல தரிசனம் அளிக்க வேண்டும் ஐயனே என்று உள்ள உருக வேண்டிக்கொள்ள வேண்டும். கன்னிச்சாமிகள் முதன்முறையாக மலைக்கு போகும் முன்பாக அன்னதானம் கொடுப்பது அவசியம் காரணம் ஐயப்பன் அன்னதான பிரியன் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!