காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்க முதல் நாளே வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் குண்டம் இறங்க ஒரு நாள் முன்னதாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்.
குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் மார்ச் 9 புதன்கிழமை மகா குண்டம் பூ மிதித்தல் விழா நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூ மிதிப்பது வழக்கம்.
காலை 6 மணிக்கு தொடங்கினால் மதியம் 1 மணி வரை கூட நீடிக்கும். இதனால் ஒரு நாள் முன்னதாக குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையில் அமரத் தொடங்கினர். கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டும், திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்களை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
குண்டம் இறங்குபவர்கள் கோவிலில் விற்கப்படும் கங்கணம் கட்டி இறங்க வேண்டும் என்பதால், கோவில் வளாகத்தில் கங்கணங்கள் விற்கப்பட்டன. குண்டம் பற்றவைக்க விறகுகள் கொண்டுவந்து போடுவது பக்தர்கள் வழக்கம். அதற்காக கோவிலை சுற்றி சுமார் 50க்கும் மேற்பட்ட விறகு கடைகள் அமைக்கபட்டு, ஒரு விறகு 10:00 ரூபாய் என விற்கப்பட்டது.
குண்டம் பற்ற வைக்க பயன்படுத்தப்பட்ட விறகுகள் போக மீதி விறகுகள் ஏலத்தில் விடப்படும். காளியம்மன், மாரியம்மன் கோவில் திருவிழாக்கள் குமாரபாளையம் சுற்றுப்புற பகுதியிலும் நடக்கவிருப்பதால் நேற்று காலை முதலே காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலங்கள் சென்று கொண்டிருந்தது.
குண்டம் இறங்கும் நாளில் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், தங்கள் நேர்த்திக்கடன்கள் செலுத்தவிருப்பதால் போலீசார் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் சார்பில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் நீர் மோர் வழங்கப்பட்டது. நாளை தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை நடைபெறவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu