குமாரபாளையம் கழிவுநீர் பள்ளத்தில் பொக்லின் மூலம் அடைப்புகள் அகற்றம்

குமாரபாளையம் ஆனங்கூர் சாலை கோட்டைமேடு மேம்பாலம் அருகில் கழிவுநீர் செல்லும் பள்ளத்தில் அடைபட்டு கிடந்த குப்பைகள் பொக்லின் மூலம் அகற்றப்பட்டன.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் ஆனங்கூர் சாலை கோட்டைமேடு மேம்பாலம் அருகில் கழிவுநீர் செல்லும் பள்ளம் உள்ளது. தரைமட்ட பாலத்தின் கீழ் பகுதியில் கழிவுநீர் செல்ல 10க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கத்தேரி பகுதியில் இருந்து வரும் இந்த கழிவுநீர் பள்ளத்தில் ஆங்காங்கே குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. மேலும் மழைநீரில் அடித்து வரப்படும் செடி,கொடிகள் உள்ளிட்ட குப்பைகள் இந்த குழாய் முகப்பில் அடைத்துக் கொள்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேக்கமடைந்து, கடும் துர்நாற்றம் வீசி வந்தது.
இந்த பாலம் வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவியர் துர்நாற்றம் தாங்க முடியாமல், மூக்கை பிடித்துகொண்டு செல்லும் நிலை உள்ளது. இது குறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், பொக்லின் உதவியுடன், இந்த பள்ளத்தில் அடைபட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.
தற்போது கழிவுநீர் எளிதில் செல்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதில்லை. இந்த கழிவுநீர் பள்ளத்தில் குப்பைகள், இறைச்சி கழிவுகள், ஓட்டல் கடை எச்சில் இலைகள் ஆகியன கொட்டப்படுவதால்தான் இது போன்ற அடைப்புகள் ஏற்படுகிறது. இந்த பள்ளத்தில் குப்பைகளை கொட்டுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu