பொங்கல் சீட்டு சேர்த்து பல லட்சம் பணம் மோசடி: பொதுமக்கள் போலீசில் புகார்
குமாரபாளையத்தில் பொங்கல் சீட்டு சேர்த்து பல லட்சம் பணம் மோசடி செய்தது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்த பொதுமக்கள்
குமாரபாளையத்தில் பொங்கல் சீட்டு சேர்த்து பல லட்சம் பணம் மோசடி செய்தது குறித்து பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறைகள் மற்றும் பல ஸ்பின்னிங் மில்களில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பு செய்ய, ஏலச்சீட்டு, வங்கி, அஞ்சல் அலுவலகம் இது போக தீபாவளி பலகார சீட்டு, பொங்கல் பலகார சீட்டு என சேமித்து வருகிறார்கள். ஆண்டின் முடிவில், சேமித்த பணம், வட்டி மற்றும் இனிப்புக்கள், ஏதாவது பாத்திரம் என்பது உள்ளிட்டவைகளை கொடுப்பதுடன் புடவைகளும் சிலர் கொடுப்பது உண்டு. இதற்கு ஆசைப்பட்டு, பல தொழிலாளர்கள் பலகார சீட்டு சேர்ந்து வருகிறார்கள். ஒரு சிலர், சேமித்த பணத்தை, உரியவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்கள். இன்னும் சில நபர்கள் சேமித்த பணத்துடன் தலைமறைவாகி விடுகின்றனர்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்ற இளைஞர், தீபாவளி பலகார சீட்டு என சொல்லி, ஸ்ரீவாரி சிறு சேமிப்பு திட்டம் என்ற பெயரில், சீட்டுக்கு ஆட்கள் பிடித்து, வாரம் வாரம் 50,100,250, 500 என்ற வகையில் வசூல் செய்து, சேமிப்பு அட்டையில் வரவு வைத்து கொடுத்துள்ளார். பொங்கல் நெருங்கி வரும் நிலையில், அவரிடம் சேமித்த பணம் கேட்ட போது, தருகிறேன் என்று கூறி, காலம் தாழ்த்தி வந்துள்ளார். இரண்டு வாரம் கால அவகாசம் கேட்ட நிலையில், தற்போது தலைமறைவாகியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுமார் 70க்கும் மேற்பட்ட நபர்கள் குமாரபாளையம் போலீசாரிடம், நகராட்சி தலைவர் விஜய்கண்ணனுடன் நேரில் வந்து, கோமதி என்பவர் பெயரில் புகார் மனு கொடுத்தனர். எஸ்.எஸ்.ஐ. முருகேசன் மனுவை பெற்றுக்கொண்டு, இன்ஸ்பெக்டர் வசம் தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த மோசடி நபர் பொதுமக்களிடம் சுமார் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியுள்ளார் என்று கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu