எல்லா முன்னாளும் இந்நாளாக மாறும் நிலை விரைவில் வரும்: பிரேமலதா பேச்சு
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா பேசினார்.
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜய்காந்த் மூவரும் ராணுவ கட்டுப்பாட்டுடன் வளர்த்த கட்சிகள் இது. இது வெற்றிக்கூட்டணி. அ.தி.மு.க., தே.மு.தி.க., நமது கூட்டணி எல்லாம் நான்கு. தேர்தல் முடிவு வெளிவரும் தேதியும் நான்கு.
இந்த தொகுதியில் இதற்கு முன்பு வெற்றி பெற்றவர்கள் தொகுதி பக்கம் வந்ததும் இல்லை, மக்கள் குறை தீர்த்ததும் இல்லை. விசைத்தறி, சாயப்பட்டறை தொழில் தி.மு.க. அரசால் நலிவடைந்து, தொழிலாளர்கள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது. மீண்டும் விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வில் வசந்தத்தை உருவாக்குவோம்.
விவசாயம் தொழில் சிறக்கவும், உறுதுணையாக இருந்து நடவடிக்கை எடுக்கப்படும். நெசவும், விவசாயமும் இரு கண்கள் போன்றது. வேலைவாய்ப்பை உருவாக்க இந்த இரண்டும் சரி செய்தால் போதும். லாட்டரி, போதை பொருட்கள் விற்பனை செய்யும் ரவுடிகளுக்கு முடிவு கட்டப்படும். மின் கட்டணம், சொத்து வரி உயர்வு, இதனால் தொழில் நசிவு. வேட்பாளர் வெற்றி பெற்றதும் அ.தி.மு.க., தே.மு.தி.க. இரண்டு கட்சியும் இணைந்து போராட்டங்கள் நடத்தி தொழில் சிறக்க வைப்போம்.
மின்தடைக்கு அணில் காரணம் என்று கூறும் கட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். வரும் போது பெயர் பட்டியல் கொடுத்தார்கள். முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ. முன்னாள் மேயர், முன்னாள் நகராட்சி தலைவர், என, அனைத்தும் முன்னாள் என்று இருந்தது கண்டு மனம் வலித்தது. இனி அனைத்து முன்னாள்களும், விரைவில் இந்நாள்களாக மாறும் நாள் விரைவில் வரும். மூன்று தெய்வங்கள் துணை நிற்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்பட பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu