குமாரபாளையம் அருகே பூங்காவில் பொது கழிப்பிடம் அமைக்க கோரிக்கை

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு அருகே தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் பூங்கா அமைக்கபட்டுள்ள பூங்கா
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு அருகே தட்டான்குட்டை ஊராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வட்டமலை, பவர்ஹவுஸ், வாசுகி நகர், குளத்துக்காடு, வேமன்காட்டுவலசு, கோட்டைமேடு, உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து தினமும் மாலை வேளைகளில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்த பூங்காவிற்கு வருகின்றனர். வயதானவர்களும் வருகின்றனர்.
தற்போது கோடைக்காலம் ஆனதால், பகல் முழுதும் வீட்டில் அடைபட்டு இருப்பவர்கள் இங்கு வந்து ஓய்வு எடுக்க பெருமளவில் வந்து கொண்டுள்ளனர். இங்கு கழிப்பிடம் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த பூங்காவை சார்ந்த இடத்தில் கழிப்பிடம் கட்டினால், பூங்காவிற்கு வருபவர்கள், கத்தேரி பிரிவு பகுதியில் பேருந்துக்காக காத்திருப்பவர்கள் என பலருக்கும் பயனுள்ளதாக அமையும். ஆகவே இந்த பகுதியில் பொதுக்கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பூங்கா அருகே வட்டமலை பகுதியில் பொறியியல் கல்லூரிகள், பார்மசி கல்லூரிகள், பிசியோதெரபி கல்லூரி, ஆக்குபெசனால் கல்லூரி, தனியார் மெட்ரிக் பள்ளிகள், அரசு உயர்நிலைப்பள்ளி, உள்ளிட்ட எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில் பல்லாயிரக்கனக்கான மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு வகுப்புகள் இல்லாத நேரத்தில், மாலை வேளைகளில் இங்கு மாணவ, மாணவியர் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.
இது அனைத்து தரப்பினருக்கும் பொழுதுபோக்கு இடமாக அமைந்துள்ளது. இங்கு பல விதமான ஊஞ்சல்கள் இருப்பதால் இங்கு வர குழந்தைகள் மிகவும் விருப்பப்படுகிறார்கள். இதன் அருகில் திருமண மண்டபங்கள் இருப்பதால், திருமணத்திற்கு வரும் உறவினர்கள், நண்பர்களும் இந்த பூங்காவிற்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றனர். பிறந்தநாள் விழாக்கள் கொண்டாடும் நபர்கள் இங்கு தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் வந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu