நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வரும் காளைகள்!
ஜல்லிக்கட்டுக்கு தயார் செய்யப்பட்டு வரும் காளை.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரபலமானவை ஆகும். தமிழகத்தில் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கேட்டு மனு அளித்து வருகின்றனர்.
மதுரையைப் போன்று, நாமக்கல் மாவட்டத்திலும் சில கிராமங்கள் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்றவைகளாக உள்ளன. குறிப்பாக, நாமக்கல் மாவட்டம், அலங்காநத்தம், போடிநாயக்கன்பட்டி கிராமங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் வளர்க்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் காளைகள் சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அழைத்துச் செல்வது உண்டு.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூருக்கு இணையாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அலங்காநத்தம் கிராமம் ஜல்லிக்கட்டுக்கு மிகவும் பிரபலமானதாகும். இந்த பகுதியில் வளர்க்கப்படும் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காகவே சிறப்பு பயிற்சிகளுடன் வளர்க்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, அந்த காளைகளுக்கு ஆரோக்கியமான தீவனங்கள், நீர் நிலைகளில் இறக்கி விடப்பட்டு நீச்சல் பயிற்சி அளிப்பது, மண்குவியலை கொம்புகளால் குத்தி மிரட்டல் பார்வை விடுவது, தலையை பல்வேறு கோணங்களில் அசைப்பது, வீரர்களை தன் பக்கம் நெருங்க விடாமல் செய்வது போன்ற யுக்திகள் பயிற்சியாக அளிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை போடிநாயக்கன்பட்டி, எருமைப்பட்டி, தேவராயபுரம், கரியபெருமாள்புரம், பொட்டி ரெட்டிபட்டி, முள்ளுக்குறிச்சி, சேந்தமங்கலம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது உண்டு. வருகிற பொங்கல் பண்டிகையின்போதும் இந்த பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த போட்டி குழுவினரால் திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழகம் தயாராகி வரும் வழியில், நாமக்கல் மாவட்டத்தில் காளைகள் வளர்க்கப்படும் அலங்காநத்தம், போடிநாயக்கன்பட்டி கிராமங்களில் வளர்க்கப்படும் காளைகளுக்கு பல்வேறு சிறப்பு பயிற்சிகளை வழங்கும் பணியில் காளை வளர்ப்போர் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu