ஆண் குழந்தைகளுக்கு நல்ல கற்பை தருவது தாயின் கடமை" - கலெக்டர் உமா மகளிர் தின நிகழ்ச்சியில் உரை

ஆண் குழந்தைகளை நல்வழியில் வளர்ப்பது நம் கடமை: கலெக்டர்
நாமக்கல்: "ஆண் குழந்தைகளை நல்வழியில், சரியாக வளர்க்க வேண்டியது தாயாக நம் அனைவரது கடமை" என்று சர்வதேச மகளிர் தின விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி உமா தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆட்சியர் உமா, "ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிராகிய நாம் அனைவரும் இன்று பல்வேறு துறைகளில், பல்வேறு பதவிகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம். பெண்களாகிய நாம் தாயாக, சகோதரியாக நம் பிள்ளைகளுக்கு குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு நல்லவற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டும்" என்றார்.
மேலும் அவர், "பெண்களாகிய நமக்கு அலுவலகத்தையும், வீட்டையும் சரியாக வழிநடத்திச் செல்லும் திறமை உள்ளது. பெண் குழந்தைகளுக்கு ஆண்கள்தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்கள் நடந்து வருவது வருத்தத்திற்குரிய ஒன்று. பெண்கள் மனத்தைரியத்துடன் இருக்க வேண்டும். ஆண், பெண் குழந்தைகளின் பாலின சமத்துவத்தை நாம் உருவாக்க வேண்டும். ஆண் குழந்தைகளை நல்ல வழியில் சரியாக வளர்க்க வேண்டியது தாயாக நம் அனைவரது கடமை" என்று வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் திருமதி சாந்தி, திருமதி சுகந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி காயத்திரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி சந்தியா, வேளாண் இணை இயக்குனர் திருமதி கலைச்செல்வி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu