சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு புதிய பெயர்

நாமக்கல்லில் உள்ள 'சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை' 'மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் செயல்பட்டு வரும் 'சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை' என்ற பெயரை 'மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அரசின் நடவடிக்கையை விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வரவேற்றுள்ளனர். இந்த ஆலைக்கு சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள எட்டு கோட்டங்களில் இருந்து சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை செய்து அனுப்பப்படுகிறது. அரவை காலத்தில் இந்த சர்க்கரை ஆலையில் தினமும் 2,500 டன் கரும்பு அரவை செய்யும் திறன் கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் நாமக்கல் அமைந்திருந்தபோது, 1961ல் அப்போதைய முதல்வர் காமராஜர் இந்த சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் திறந்து வைத்தார். தற்போது 40,000 உறுப்பினர்கள் இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்பு வினியோகம் செய்து வருகின்றனர். 1997 ஜனவரி 1ம் தேதி சேலத்தில் இருந்து நாமக்கல் பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக உதயமானது. ஆனால் மோகனூரில் செயல்பட்டு வந்த 'சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை' பெயர் மாறாமல் அப்படியே இயங்கி வந்தது. இந்த ஆலையின் பெயரை 'மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என பல்வேறு கட்சியினர், அமைப்பினர், விவசாய சங்கத்தினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், 'மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை' என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என ஆலை பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது. கடந்த 2024 அக்டோபர் 22ல் நாமக்கல்லில் நடந்த அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் 'சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை என அழைக்கப்படும்' என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu