தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை, பேக்கரிக்கு 2,000 ரூபாய் அபராதம்

தரமற்ற உணவு பொருள் விற்பனை செய்த பேக்கரிக்கு அபராதம்
ராசிபுரம்: தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்த பேக்கரிக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
கொல்லிமலையைச் சேர்ந்த 30 வயதான யுவராஜ் என்பவர் தன் நண்பர்களுடன் கடந்த 8ஆம் தேதி காளப்பநாயக்கன்பட்டி அருகே திருமலைப்பட்டி பிரிவு சாலையில் உள்ள பிவிஎம் பேக்கரியில் மசால் பூரி வாங்கிச் சாப்பிட்டனர். அதில் புழுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த யுவராஜ் இதை சுட்டிக்காட்டியபோது, பேக்கரியில் வேலை செய்தவர்கள் அவரை மிரட்டி அனுப்பினர். யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஆர்டர் செய்த மசால் பூரிக்கு 90 ரூபாய் பணத்தை போன் பே மூலம் செலுத்திவிட்டுச் சென்றிருந்தனர்.
இதுகுறித்து யுவராஜ், நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் மாநில உணவு பாதுகாப்புத் துறைக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. அருண் தலைமையிலான அதிகாரிகள் பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பேக்கரியில் உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததையும், தரமற்ற உணவு கலர் பொடிகள் பயன்படுத்துவதையும் கண்டறிந்தனர். உடனடியாக தரமற்ற பொடிகள் மற்றும் 1.2 கிலோ தரமற்ற உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் பேக்கரிக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
அதேவேளையில், பள்ளிப்பாளையம் உணவு பாதுகாப்புத் துறை சார்பாக ஒட்டமெத்தை, ஈக்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் திரு. ரங்கநாதன் மற்றும் அதிகாரிகள் ஓட்டல்கள் மற்றும் மளிகை கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மூன்று கிலோவும், காலாவதியான குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் ஆறு கிலோவும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து இரண்டு கடைகளுக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu