நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட்!

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் 2 விஏஓக்கள் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.இதனால் அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையை வைத்து, மற்ற விஏஓ-க்கள் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள். இதனால், வருவாய்த்துறை பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன. என்ன நடந்தது?
கல்குவாரியிலிருந்து ஓட்டம்
நாமக்கல் அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து பகுதியில், அரசுக்கு சொந்தமான கரடு புறம்போக்கில், அனுமதியின்றி கற்களை வெட்டி எடுப்பதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த, 19ம் தேதி, நாமக்கல் ஆர்டிஓ பார்த்தீபன் தலைமையிலான வருவாய்த்துறையினர், உடனடியாக போலீசாருடன் நேரடியாகவே சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகளை பார்த்ததுமே, அங்கு கல்குவாரியில் கற்களை உடைத்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், வாகனங்களின் டிரைவர்கள், அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, குவாரியில் நிறுத்தப்பட்டிருந்த பாறைகளை உடைக்கும் ஹிட்டாச்சி இயந்திரம், கம்ப்ரசர் டிராக்டர்கள், லாரிகள், டூவீலர் உள்பட 23 வாகனங்களை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
அரசுக்கு தெரியப்படுத்தாதது ஏன் ?
இதனிடையே, கல்குவாரியில் ஆய்வு செய்வது குறித்து, அரசுக்கு முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? என கூறி, கொண்டமநாயக்கன்பட்டி விஏஓ ஜான்பாஸ்கோ, விட்டமநாயக்கன்பட்டி விஏஓ கோகிலா ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து நாமக்கல் ஆர்டிஓ உத்தரவிட்டார். இதேபோல் கனிமவளத்துறையிலும், உதவி புவியியல் ஆய்வாளர் ஒருவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
அதிர்ந்த விஏஓக்கள்
இதைக்கேட்டு மாவட்ட விஏஓக்கள் அத்தனை பேரும் அதிர்ச்சியடைந்தனர். கடமையை செய்த விஏஓக்களை சஸ்பெண்ட் செய்தது சரியில்லை, அவர்களது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி, ஆர்டிஓ அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களிடம் ஆர்.டி.ஓ., பார்த்தீபன், பேச்சுவார்த்தை நடத்தினார். கலெக்டரிடம் தெரிவித்து இதுசம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி சொன்னார்.
ஆனாலும், சஸ்பெண்ட் உத்தரவை சொன்னபடி ரத்து செய்யாததால், நேற்று 2-ம் நாளாக, ஆர்டிஓ அலுவலகத்தில், விஏஓக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து விஏஓக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், இருப்பிடம், வருவாய், ஜாதி சான்றுகள், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, அடங்கல், பிறப்பு, இறப்பு பதிவு உள்ளிட்ட அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் எந்த சான்றிதழையும் பொதுமக்கள் பெற முடியாமல் சிரமத்துக்குள்ளாகியிருக்கிறார்களாம். எனவே மாவட்ட கலெக்டர் இதில் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu