எலச்சிபாளையத்தில் கோவிலில் மோதல் – 5 பேர் மீது வழக்கு

திருவிழாவில் இருதரப்பினர் மோதல்: 5 பேர் மீது வழக்குப் பதிவு
எலச்சிபாளையம் அருகே மரப்பரை அங்காளம்மன் கோவிலில் சிவராத்திரி அன்று நடைபெற்ற மயான கொள்ளை விழாவின் போது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மரப்பரை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் பழனியப்பன் (60) மற்றும் அவரது ஆதரவாளரான அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (65) ஆகியோர், ராசிபுரம் தொப்பப்பட்டியைச் சேர்ந்த நித்தியானந்தம் (34), மரப்பரை பகுதியைச் சேர்ந்த அருள்குமார் (34), ரங்கசாமி (65) ஆகியோரிடம், "பல ஆண்டுகளாக கோவிலுக்கு வராத நீங்கள், இன்று எதற்காக கோவிலுக்கு வந்தீர்கள்" என்று கேட்டதை அடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் முன்னாள் ஊராட்சி தலைவர் பழனியப்பன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் காயமடைந்து திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றொரு தரப்பினரான நித்தியானந்தம், அருள்குமார், ரங்கசாமி ஆகியோர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த எலச்சிபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் விசாரித்தனர். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்த 5 பேர் மீதும் பரஸ்பர புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கோவில் விவகாரங்களில் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், அது தற்போது மோதலாக வெடித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மரப்பரை கிராமத்தில் தற்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu