விரைவில் மாதாந்திர மின்கட்டணம்- அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
ஈரோடு ஜீவா நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்குத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்.27ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் தி.மு.க .கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி,மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். கிருஷ்ணம்பாளையம், வைராபாளையம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மாதாந்திர மின்கட்டணம் விரைவில் நடைமுறைக்கு வரும். மின் கட்டணம் கணக்கீடு செய்வதில் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்ட பிறகு மாதாந்திர கணக்கீடு எடுக்கப் பட்டு மின்கட்டணம் வசூவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், பொதுமக்கள் கை சின்னத்திற்கு வாக்களிக்க உற்சாகத்தோடு இருக்கின்றனர். செல்லும் இடங்களில் மக்கள் உற்சாகத்தோடு வரவேற்பு அளிக்கின்றனர். முதல்வரின் கடந்த ஒன்றரை ஆண்டு கால ஆட்சியின் சாதனையாக கைச் சின்னம் மாபெரும் வெற்றி பெறும்.
மேற்கு மண்டலம், அ.தி.மு.க.வின் கோட்டை என்பது தவறான கருத்து. அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் கூட நடத்த முடியாத ஒரு நிலை இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு மக்களின் திட்டங்கள் நிறைவேற்றப் பட்டு வருகின்றன. பா.ஜ.க. ஒரு 'மிஸ்டு கால் பார்ட்டி' பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி. அவர்களை மையப்படுத்தி தேர்தல் நடப்பது போன்ற சூழலை உருவாக்குகின்றனர் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu