முதல்வர் ஆகிறார் ஸ்டாலின்

முதல்வர் ஆகிறார் ஸ்டாலின்
X

மு.க.ஸ்டாலின் 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனிப்பெரும்பான்மை பெற்று தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

தந்தையின் அரசியல் பள்ளியில் பயின்று ஞானம் பெற்றவர். தனக்கென ஒரு தனி அரசியல் பாணியை கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். தனது சிறு வயதிலேயே திமுகவின் தொண்டனாக அரசியல் பயணத்தை தொடங்கி படிப்படியாக ஒரு உயர்ந்த இடத்தை அடைந்தவர்.


மிசா காலத்தில் அவர் பட்ட துன்பங்களை அவ்வப்போது கூறி தனது முதிர்ச்சியை மெருகேற்றிக்கொண்டவர். குடும்பத்திலும்,கட்சியிலும் பிரிவினைகள் ஏற்பட்டபோது சாதுர்யமாக அதை கையாண்டு சிக்கலை தீர்த்தார். அதன்மூலம் கட்சியும், குடும்பமும் பிரியாமல் காப்பாற்றப்பட்டது. அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தால் கட்சி இரண்டாகியிருக்கும். ஸ்டாலின் பொறுமையாக, சிறு சலனங்களையும் வெளியே காட்டிக்கொள்ளாமல் பிரச்னைகளை எதிர்கொண்டார். அந்த ஆளுமைத் திறனே இன்று முதல்வர் ஆகும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தந்துள்ளது.

தந்தையிடம் அரசியல் பயின்றாலும் தனக்கென தனி அடையாளம் இருக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர். கருணாநிதி முதல் அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பு வகித்தார். அப்போது கீரிப்பட்டி, பாப்பாபட்டி போன்ற பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


அவர் துணிச்சலோடு இரண்டு பஞ்சாயத்துகளில் தேர்தலை நடத்தி முடித்தார். சென்னை மேயராக பதவியில் இருந்தபோதும் பல சாதனைகளை செய்தவர். துணை முதல்வராக இருந்தபோது கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு வழிவகுத்தவர் ஸ்டாலின். இப்படி பல்வேறு நிலைகளைத் தாண்டி இன்று முதல்வராக பதவி ஏற்க உள்ளார். அவர் சிறந்த முதல்வராக தமிழக மக்களுக்கு சேவை செய்வார் என்ற நம்பிக்கையில் மக்கள் அவருக்கு அந்த வாய்ப்பினை வழங்கியுள்ளனர். தனிப்பெரும் தலைவனாக உருவாகிய ஸ்டாலின், மக்களின் முதல்வர் என்ற நிலையடைய நாமும் அவருக்கு வாழ்த்து கூறுவோம்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!