பால் விநியோகம் பாதிக்காது.. அதிகம் வாங்கி செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்காதீர்!
பைல் படம்
பால் கிடைக்காது என அதிக அளவில் வாங்கி இருப்பு வைத்து, செயற்கையான பால் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனரும் மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுழன்றடிக்கும் சூறாவளி புயலோ, விடாது பெய்யும் கனமழையோ, பருவ காலத்தில் விடாது கருப்பு என பெய்யும் அடைமழையோ, ஆறு, கால்வாய்களை ஆக்கிரமித்து கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளமோ, சீறும் சுனாமியோ, நடுங்க வைக்கும் கடுங்குளிரோ, உலகையே புரட்டிப் போடும் நிலநடுக்கமோ இவற்றில் இயற்கை சீற்றங்கள் எதுகானினும் எங்கள் பால் விநியோகம் பாதிக்கப்படாது.
அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள் நடத்தும் கடையடைப்பு போராட்டங்களோ, சமூக விரோத சக்திகளின் வன்முறை வெறியாட்டமோ இதில் எதுவாகினும் பால் விநியோகம் பாதிக்கப்படாது. இந்தியாவின் முதல் குடிமகன், பாரத பிரதமர், தமிழகத்தின் முதல்வர் என உயர் பதவியில் இருப்பவர்களோ அல்லது எங்களை ஈன்றெடுத்தவர்களோ, எங்களது உடன்பிறப்புக்களோ, நெருங்கிய உறவுகளோ, நட்புகளோ இதில் எவர் இயற்கையாக மரணித்தாலும் பால் விநியோகம் பாதிக்கப்படாது.
பால் முகவர்களின் உற்றார், உறவுகள், நட்புகளின் இல்லங்களில் சுக, துக்க நிகழ்வுகள் எவை நடந்தாலும் பால் முகவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியமே கிடைக்கவில்லை என்றாலும், மத்திய, மாநில அரசுகள் அங்கீகரிக்கவில்லை என்றாலும் பால் விநியோகம் பாதிக்கப்படாது.
பால் முகவர்களின் உழைப்பு சுரண்டப்பட்டாலும், திருடப்பட்டாலும் விநியோகம் பாதிக்காது. ஆக மொத்தம் பால் முகவர்கள் எந்த சூழ்நிலையிலும் பொதுமக்களுக்கான பால் விநியோகம் என்பது இதுவரை தங்குதடையின்றி செய்து வருகின்றனர். பால் முகவர்களாகிய நாங்கள் "மக்கள் சேவையே மகேசன் சேவை" என்கிற அடிப்படையில் தொடர்ந்து செயலாற்றி வந்திருக்கிறோம். இனி வருங்காலங்களிலும் அப்படியே எங்களது செயல்பாடுகள் அமைந்திருக்கும்.
தங்கள் மக்கள் (குடும்பத்தினர்) நலனில் அக்கறை கொள்ளாவிட்டாலும் கூட பொதுமக்கள் நலனில் 100% அக்கறை கொண்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பால் வணிகத்தை சேவை சார்ந்த தொழிலாகவே சுவாசித்தும், நேசித்தும் வருபவர்கள் தான் பால் முகவர்களாகிய எம் மக்கள்.
அந்த வகையில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர் கனமழை, மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதின் அடிப்படையில் நாளை முதல் எங்கே பால் கிடைக்காமல் போய் விடுமோ..? என்கிற அச்சத்தில் இன்று மாலை முதலே பொதுமக்கள் தங்களின் தினசரி தேவைக்கு அதிகமாக பாலினை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள தொடங்கியுள்ளதால் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் உள்ள சில்லரை கடைகளில் மாலையில் இருந்த மொத்த பாலும் விற்றுத் தீர்ந்து விட்ட காரணத்தால் அதற்கு பின்னர் தங்களின் வழக்கமான தேவைக்கு பால் வாங்கும் பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டு செயற்கையான பால் தட்டுப்பாடு உருவாகி தற்போது ஒருவிதமான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே நாளை பால் கிடைக்காது, பால் விநியோகம் இருக்காது, கடைகள் இயங்காது என நம்பி, அல்லது அவ்வாறு பரப்பப்படும் வதந்திகளையோ அல்லது ஊடகங்களில் பெரிதுபடுத்தப்படும் செய்திகளை நம்பியோ அதன் காரணமாக பால் கிடைக்காது என அச்சம் கொண்டு தங்களின் தினசரி தேவைக்கு அதிகமாக பால் பாக்கெட்டுகளை அதிக அளவில் வாங்கி இருப்பு வைத்து செயற்கையான பால் தட்டுப்பாடு ஏற்பட பொதுமக்களே காரணமாக வேண்டாம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஏனெனில் நீங்கள் அவ்வாறு பால் கிடைக்காது, பால் விநியோகத்தில் இருக்காது, கடைகள் இயங்காது என அச்சம் கொண்டு பால் பாக்கெட்டுகளை தினசரி தேவைக்கு அதிகமாக வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள முயல்வதால் கடந்த காலங்களில் இது போன்ற சமயங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டு அதனை ஒரு சில சமூக விரோதிகள் (இயற்கை பேரிடரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முயலும் பேராசை பிடித்தவர்கள் எவராயினும் அவர்கள் சமூக விரோதிகளே) பயன்படுத்திக் கொண்டு பாலினை அதிக விலைக்கு விற்பனை செய்த நிகழ்வுகள் அறங்கேறியுள்ளதால் தற்போதும் அது போன்ற நிகழ்வுகள் அறங்கேற வாய்ப்புள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் பால் பாக்கெட்டுகள் கிடைக்காது என தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், ஆவின் மற்றும் அனைத்து தனியார் பால் நிறுவனங்களும், பால் முகவர்களும், பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்களும் வழக்கமான பால் விநியோகத்தில் ஈடுபடுவார்கள் என்பதையும், அதற்கான ஆயத்தப் பணிகளில் நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம் என்பதையும், ஒருவேளை விநியோக நேரத்தில் சற்று கால தாமதம் ஏற்பட்டாலும் கூட பால் விநியோகம் தடையின்றி தொடரும் என்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் உறுதி செய்வதோடு, வடகிழக்கு பருவமழை காலத்தில் பாலுக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட வழிவகுத்து, பாலினை அதிக விலைக்கு விற்பனை செய்ய பொதுமக்களாகிய நீங்களே காரணமாக இருந்து விடாதீர்கள் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu