கவர்னருடன் சந்திப்பு... அதிமுகவில் ‘கட முடா’
பைல் படம்
கவர்னரை சந்தித்த போது எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், வடசென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் பாலகங்கா, திருவள்ளூர் மா.செ பெஞ்சமின் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆளுநரைச் சந்திக்க தங்களை அழைத்துச் செல்லாததால் சீனியர்கள் பலர் எடப்பாடி மீது கடுமையான அப்செட்டில் உள்ளனராம். குறிப்பாக, அதிமுக எம்.பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, செம்மலை, காமராஜ், விஜயபாஸ்கர் போன்றோர் தங்களை எடப்பாடி பழனிசாமி ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லாததால் அப்செட் ஆகியுள்ளனராம்.
தம்பிதுரை, டெல்லியில் எடப்பாடி பழனிசாமி கை ஓங்குவதற்காக பல்வேறு பணிகளில் ஈடுபட்டவர். தேர்தல் ஆணையம், மத்திய அரசு துறைகளின் மூலம், எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைத்ததற்கு, டெல்லியில் தம்பிதுரை செய்த லாபி முக்கியமானது. சென்னை பேரணியில் கலந்து கொண்ட தம்பிதுரை, ஈபிஎஸ் தன்னை ஆளுநரை சந்திக்கும்போது அழைத்துச் செல்லவில்லை என செமையாக அப்செட் ஆனாராம்.
இதேபோல, ஆர்பி. உதயகுமாரும் தன்னை எடப்பாடி ஓரங்கட்டுவதாக நினைக்கிறாராம். ஓபிஎஸ்ஸுக்கு மாற்றாக தென் மாவட்டத்தில் தன்னை முன்னிறுத்தி வந்த எடப்பாடி பழனிச்சாமி சமீபமாக தன்னை ஓரங்கட்டுகிறாரோ என்ற எண்ணம் ஆர்பி. உதயகுமாருக்கு ஏற்பட்டுள்ளதாம். முன்பு ஆளுநரைச் சந்தித்தபோதும் அழைத்துச் செல்லவில்லை, இப்போதும் அழைத்துச் செல்லவில்லை என்பதால் அப்படியே ஒதுங்கி விட்டாராம்.
இதேபோல, முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் அதிருப்தியை வெளிக்காட்டி யுள்ளனராம். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தன்னை ஈபிஎஸ் அழைத்துச் செல்லவில்லை என்ற அதிருப்தியை பேரணியின் போதே வெளிப்படுத்தி விட்டாராம். அதேபோல, முக்கிய பெண் நிர்வாகிகளான கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோரும் தங்களுக்கு முக்கியத்துவமே தரப்படுவதில்லை என ஆதங்கத்தில் இருக்கிறார்களாம். ஆக மொத்தம், வலிமையான எதிர்க்கட்சித் தலைவராக தன்னை நிலைநிறுத்தும் வகையில் ஈபிஎஸ் மேற்கொண்ட இந்த ஆளுநர் சந்திப்பு முயற்சி, கட்சிக்குள்ளேயே பல்வேறு புகைச்சல்களைக் கிளப்பியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu