மருத்துவ படிப்பிற்கான ஆர்வம் அதிகரிப்பு : நீட் தேர்வுக்கு 23.81 லட்சம் மாணவர்கள் பதிவு..!
மருத்துவப் படிப்பு (கோப்பு படம்)
நாமக்கல்:
இந்த ஆண்டு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு மொத்தம் 23,81,833 மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட சுமார் 3 லட்சம் மாணவர்கள் அதிகமாக பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் வருகிற மே மாதம் 5ம் தேதி எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் பிரிவு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான NEET UG போட்டித் தேர்வு நடைபெறுகிறது. தேசிய அளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சுமார் 1,88,398 இடங்கள் உள்ளன. இதற்கு இந்தியா முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 24பேர் மூன்றாம் பாலின பிரிவின் கீழ் விண்ணப்பம் செய்து பதிவு செய்துள்ளனர்.
மொத்தம் 23 லட்சத்து 81 ஆயிரத்து 833 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். பதிவுசெய்யப்பட்ட 23 லட்சம் மாணவர்களில், 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் OBC NCL பிரிவைச் சேர்ந்தவர்கள், 6 லட்சம் பேர் பொதுப் பிரிவு மாணவர்கள், 3.5 லட்சம் பேர் பட்டியல் இன (SC) மாணவர்கள், 1.8 லட்சம் மாணவர்கள் எஞுண-உஙிகு பிரிவைச் சேர்ந்தவர்கள். 1.5 லட்சம் மாணவர்கள் பழங்குடியினர் (ST) பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உத்தரபிரதேசம் மாநிலம், 3,39,125 பேர் விண்ணப்பங்களை பதிவு செய்து, தேசிய அளவில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை பதிவு செய்துள்ளது, அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா 2,79,904. ராஜஸ்தான் 1,96,139 ஆகியவை உள்ளன. தென் மாநிலங்களில், தமிழ்நாட்டில் 1,55,216 விண்ணப்பங்களும், கர்நாடகாவில் 1,54,210 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முந்தைய ஆண்டுகளின் ஒப்பீடு
தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில், கடந்த ஆண்டு, உத்தரப் பிரதேசத்தில் 1.4 லட்சம் விண்ணப்பதாரர்களுடன் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் இருந்தனர், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (1.3 லட்சம்) மற்றும் ராஜஸ்தான் (1 லட்சம்) ஆகியவை இருந்தன. கடந்த ஆண்டு, மொத்தம் 20,87,449 விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்தனர். கடந்த ஆண்டு நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெற்றது. விண்ணப்பம் செய்தவர்களில் 97.7 சதவீதம் பேர் தேர்வு எழுதினர் மற்றும் மறுதேர்வு சுமார் 8,700 விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 499 நகரங்களில் 4097 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2022ல் 18 லட்சமாக பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2023ல் 20.87 லட்சமாக உயர்ந்து, இந்த ஆண்டு சுமார் 3 லட்சம் விண்ணப்பதாரர்கள் அதிகரித்து 23.81 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு எழுதும் மற்றும் தகுதிபெறும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் இதேபோன்ற போக்கு காணப்பட்டுள்ளது, 2022 இல் 17 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை, 2023ல் 20.36 லட்சமாக அதிகரித்துள்ளது மற்றும் இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2022ல் 9.93 லட்சத்தில் இருந்து 2023ல் 11.45 லட்சமாக அதிகரித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu