மயிலாடுதுறை: மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர்

மயிலாடுதுறை: மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர்
X

கோப்புப்படம்

மீனவர்கள் மோதல் பிரச்சனையில் கடந்த 8 நாட்களாக கடலுக்கு செல்லாத மயிலாடுதுறை மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்கச் சென்றனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க மீனவர்களுக்கும் சாதாரண மீன்பிடி மீனவர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. கடந்த 14ஆம் தேதி சுருக்குமடி வலையுடன் சென்ற பூம்புகார் சந்திரபாடி மீனவர்களை தரங்கம்பாடி வானகிரி உள்ளிட்ட கிராம மீனவர்கள் பைபர் படகுகளில் சென்று நடுக்கடலில் சுற்றிவளைத்தனர். அப்போது சுருக்குமடி விசை படகு மோதி ஒரு பைபர் படகு மூழ்கியது 3 பேர் காயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனையில் பூம்புகார் மீனவர்களுக்கு சொந்தமான நான்கு பைபர் படகுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இதனையடுத்து கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர் அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் திருமுல்லைவாசல் கிராமத்தில் மோதலில் ஈடுபட்ட சுருக்குமடி மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிடுவதாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி எட்டு நாட்களுக்குப் பிறகு 20 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலையிலேயே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். காலை 8 மணி அளவில் கரை திரும்பிய மீனவர்கள் வலையில் மத்தி, கானாங்கெளுத்தி, பொடுவாய் உள்ளிட்ட சிறிய வகை மீன்கள் பிடிபட்டன. தரங்கம்பாடி பகுதியில் ஒரு வாரத்திற்கு பின்னர் மீன் பிடிக்கப்பட்டதால் அதனை வாங்க அசைவப் பிரியர்கள் கடைவீதியில் குவிந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!