சோழவந்தான் அருகே கால்வாய்க்காக பள்ளம் தோண்டும் பணியால் பொதுமக்கள் அவதி

சோழவந்தான் அருகே கால்வாய்க்காக பள்ளம் தோண்டும் பணியால் பொதுமக்கள் அவதி
X
சோழவந்தான் அருகே வீடுகள் முன் தோண்டப்பட்ட பள்ளத்தால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கால்வாய்க்காக பள்ளம் தோண்டும் பணியால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்கால் ஊராட்சியில், காளியம்மன் கோவில் முதல் நிலையூர் கால்வாய் வரை சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து சுமார் 10 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிக்காக அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு சென்றனர். ஆனால், ஏனோ பணிகளை தொடங்கவில்லை

கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென ஜே.சி.பி. இயந்திரத்தை கொண்டு வந்த ஒப்பந்ததாரர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை தொடங்க முற்பட்டனர். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தற்போது, மழைக்காலம் தொடங்கி விட்டதாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் இப்போது பணிகளை தொடங்க வேண்டாம் என்றும், மழை காலம் முடிந்த பின்பு பணிகளை செய்யலாம் என்றும் எடுத்துக் கூறினர் .ஆனால், பொதுமக்கள் கூறியதை பொருட்படுத்தாமல், ஒப்பந்ததாரர் பணிகளை தொடங்கினார். மேலும், பொதுமக்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பணிகளை நிறுத்தவில்லை.

அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் நேரில் சென்று முறையிட்ட போது தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஒப்பந்ததாரர் யார் என்று தெரியாது என்றும் நீங்கள் எங்கு சென்று முறையிட்டாலும் நானும் உங்களுடன் வருகிறேன் என்று கூறினார் .

மேலும் ,இது சம்பந்தமாக வாடிப்பட்டி யூனியன் அலுவலகத்தை பலமுறை தொடர்பு கொண்டு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அவரிடம் நேரில் பேச முற்பட்ட போதும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பேசியவர்கள் ஆணையாளரிடம் கூறுவதாகவும், நேரில் பார்க்க வர சொல்வதாகவும் கூறினார்கள். ஆனால், எந்த ஒரு அதிகாரியும் ஊராட்சியில் வேலை நடக்கும் இடத்தை பார்வையிட வரவில்லை. அதனைத் தொடர்ந்து, ஒப்பந்ததாரர்கள் பணியை தொடங்கி கால்வாய் கட்டும் பணிக்காக சுமார் 200 மீட்டர் தூரம் பள்ளத்தை தோண்டி விட்டு சென்று விட்டனர்.

தற்போது, கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி வீடுகளுக்குள் இருப்பவர்கள் வெளியில் செல்ல முடியாமலும், பூச்சிகளும் விஷ ஜந்துக்களும் வீட்டுக்குள் வர வாய்ப்பிருப்பதாகவும், தொடர்ந்து மழை பெய்வதால் ஈரப்பதம் அதிகமாகி அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனும் பயத்துடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் ,அல்லது அந்த பகுதி மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்