உசிலம்பட்டி அருகே கள்ளச்சந்தையில் மது ..? தடுக்க கோரிக்கை..!

உசிலம்பட்டி அருகே கள்ளச்சந்தையில் மது ..? தடுக்க கோரிக்கை..!
X

மதுரை, விக்கிரமங்கலம்.

கள்ளச் சந்தை மது விற்பனையை தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விக்கிரமங்கலம் பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபான விற்பனை அதிகரித்து வருவதாக கூறியுள்ள அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், விக்கிரமங்கலம் பகுதியில் கள்ளச் சந்தையில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளில் மது விற்பனை நடைபெற்று வருவதாக, இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில கடைகளில் காலை 5 மணி முதல் மதுபான விற்பனையில் அரசால் விற்கப்படும் மது மற்றும் பீர் பாட்டில்கள் ஆகியன கள்ளச் சந்தையில் கிடைக்கின்றன. இதனால், குடிமகன்கள் நிறைய பேர் அதிக விலை கொடுத்து வாங்கி மதுவை அருந்தி வருகின்றனர்.

கள்ளச் சந்தையில், மது விற்பனை செய்யும் நபர்கள் குடிசைத்தொழில் போல் அதனை செய்து வருகின்றனர். மேலும், டாஸ்மாக் கடைகளில் கிடைக்காத சரக்குகள் கூட அந்த பெட்டி கடைகளில் கிடைப்பதாக குடிமகன்கள் தெரிவிக்கின்றனர். எங்கு மதுபான கொள்முதல் நடக்கிறது? யார் யார் மதுவை கள்ளச் சந்தையில் விற்பனை செய்கிறார்கள் என்று அதிகாரிகளுக்கு தெரிந்தும் கண்டும் காணாதது போல் உள்ளது வருந்தத்தக்கது.

மேலும், கள்ளச் சந்தையில் மது விற்பதால் அரசுக்கு வருவாய் இழப்பை மறைமுகமாக ஏற்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட மதுவிலக்கு பிரிவு, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி ஆய்வு செய்து, கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இந்த பகுதியில் மது போதையில் வாலிபர்கள் தாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அதைப்போல, கிராமங்களில் பல்வேறு பிரச்னைக்கு இந்த கள்ளச் சந்தை மது விற்பனை, மூலக் காரணமாக உள்ளது. எனவே ,இதனை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!