ஜல்லிக்கட்டு உரிமை காப்பாற்றப்படுமா? முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி
பைல் படம்
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி: ஜல்லிகட்டு இது வெறும் வார்த்தை அல்ல, நம் இனத்தின் அடையாளம், நம் வீரத்தின் அடையாளம், நம் பாரம்பரியத்தின் அடையாளம், நம் பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறது.
ஜல்லிக்கட்டுக்கு ஒரு தடை என்றகிற போது ஒட்டுமொத்த உலக தமிழினமே உணர்ச்சி கொந்தளிப்பாக நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்திய அந்த வரலாறு இந்திய திருநாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்போது , ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வந்த, அவசர சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான, விசாரணையை உச்சநீதிமன்றம் வருகின்ற 29 -ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது..
ஜல்லிக்கட்டு தொடர்பாக, அவசர சட்டம் இயற்றிய தமிழக சட்டப்பேரவையின் அதிகாரம் குறித்து மட்டுமே ,அக்கறை செலுத்த உள்ளோம் குறித்து என நீதியரசர்கள் தெரிவித்திருப்பது, நாம் இந்த வழக்கில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும், அக்கறை செலுத்த வேண்டும் சட்ட வல்லுனர்கள், சட்ட நிபுணர்களோடு கலந்து பேசி இந்த ஜல்லிகட்டு உணர்வு பண்பாடு, சார்ந்தது என்பன உள்ளிட்ட கருத்துகளை எடுத்து வைக்க மறந்துவிடக்கூடாது .
ஆகவே, ஜல்லிக்கட்டு என்பது வெறும் வார்த்தை அல்ல, அது நம்முடைய சுவாசம். சீறி வருகிற காளைகளை இளம் சிங்கங்களாக அடக்குகிற அந்த இளம் சிங்கங்களின் கள்ளம் கபடமற்ற அந்த வீரத்தை, உலகத்திற்கு எடுத்துக்காட்டுகிற தமிழ் பாரம்பரியத்தின் வீரத்தை, நிலை நாட்டுவது இந்த அரசுக்கு மிக முக்கிய கடமையாக இருக்கிறது. ஆகவே இளைஞர்களுக்கு ,ஒரு அச்சம் இன்றைக்கு ஏற்பட்டிருப்பது நமக்கு கவலை அளிக்கிறது. தொடர்ந்து முதல் முதலாக அன்னை தமிழகத்தில், ஒரு முதல்வர் பச்சைக்கொடி துவக்கி வைத்த வரலாறு பச்சைக் கொடியை அசைத்து துவக்கி வைத்த பெருமைக்குரியவர் எடப்பாடியார் ஆவார் .
இந்த ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வழக்கில், நமக்கு எதிர் தரப்பை சார்ந்தவர்கள் எடுத்து வைத்திருக்கிற வாதம் நமக்கு கவலை ஏற்படுத்தியிருக்கிறது. .ஜல்லிகட்டு போட்டியில், மாடுகள் படுகாயங்கள் ஏற்படுகின்றன. விலங்குகளுக்கு ஆபத்து விளைவிக்கும் விளையாட்டு அனுமதிக்க கூடாது. விலங்குகளின் பாதுகாப்புக்காக பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் நோக்கத்தை தமிழகத்தின் அவசர சட்டம் சிதைக்கிறது, என்றெல்லாம் வேதனை தருகிற வார்த்தைகளை நீதியரசர்களுக்கு, முன்பாக வழக்கறிஞர்கள் எடுத்து வைத்திருப்பது நம்மை பதைபதைக்க வைக்கிறது.
ஜல்லிக்கட்டு உரிமையை நமது உரிமை, நம் பாரம்பரிய உரிமை, நம் பண்பாட்டு உரிமை இது நேற்று பெற்ற உரிமை அல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடிய 75 ஆண்டுகள் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோமே அதைவிட ஜல்லிக்கட்டு உரிமை என்பது நமது பிறப்புரிமை.
மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டுகள் நமது அடையாளமாகும். நம் வீரத்தின் அடையாளமாக சீறி வருகிற அந்த காளைகளை இளம் சிங்கங்கள் அடக்குகிற அந்த காட்சி , நம் வீரத்தின் அடையாளமே தவிர, யுத்த களத்திற்கு செல்கிற போர்வீரன் வெற்றியை நோக்கி செல்கிறான், அங்கே அவன் உயிரை சிறிதாக நினைப்பதில்லை, தாய் மண்ணுக்கு , தன்னுடைய வெற்றியை பரிசாக தர வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான்.
தன்னுடைய வெற்றி என் தாய் நாட்டின் வெற்றி என்று சொல்லுகிற அந்த வீர பரம்பரை வழியில் வேலுநாச்சியார் மற்றும் முறத்தால் புலியை விரட்டிய புறநானூற்று தாய்மார்கள் பெற்றெடுத்த அந்த இளம் சிங்கங்கள் களமாடுகிறார்கள். ஜல்லிகட்டு உரிமையை பெற்று தருகிற அந்த முழு பொறுப்பு திராவிட முன்னேற்றக்கழக அரசுக்கு இருக்கிறது. அதில் எள் முனையளவும் தவறிவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu