மதுரையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்

மதுரையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் வழங்கல்
X

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,பல்வேறு துறைகளின் சார்பில் 342 பயனாளிகளுக்குஅரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கை களின் மூலம் நிதிப்பற்றாக்குறை ரூபாய் 30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசின் ஈராண்டு சாதனை பயணத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளின் சார்பில் 342 பயனாளிகளுக்கு ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்குமாசி வீதியில் உள்ள தருமை ஆதீனம் சொக்கநாதர் மகாலில் நேற்று நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான அரசின் ஈராண்டு சாதனை பயணத்தையொட்டி,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பல்வேறு துறைகளின் சார்பில் 342 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 62 இலட்சத்து 21 ஆயிரத்து 116 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. ”எல்லோர்க்கும் எல்லாம்” என்ற நோக்கில் சமூக நீதி, சமத்துவம் அனைவருக்கும் சமவாய்ப்பு ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மனிதநேயம், செயல்திறன் ஆகிய இரண்டும் சிறப்பாக செயல்படும் ஒரு அரசாங்கத்திற்கு அடையாளமாகும்.

அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான இந்த அரசு மனிதநேயத்தோடு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை சிறந்த முறையில் செயல்படுத்தி வருகின்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் , பொறுப்பேற்ற போது ஏறத்தாழ ரூபாய் 65 ஆயிரம் கோடி நிதிப்பற்றாக்குறை என்ற நிலையில், இந்த அரசு இருந்தது. கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் நிதிப்பற்றாக்குறை ரூபாய் 30 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதை மேலும், குறைத்திடும் வகையில் தொடர்ந்து பல்வேறு நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ததோடு மட்டுமல்லாமல் ஏறத்தாழ ரூபாய் 1 இலட்சம் கோடி அளவில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இது இந்த அரசின் செயல்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 34 இலட்சம் பயனாளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. தற்போது, கூடுதலாக 1.50 இலட்சம் பயனாளிகள் மாதாந்திர உதவித்தொகை பெற நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மேலும், மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி சார்பாக பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண்பதற்கு ஏதுவாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1871 பயனாளிகளக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் 1016 முதியோர் உதவித்தொகை, 499 ஆதரவற்றோர் உதவித்தொகை, 54 மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை போன்ற திட்டப் பயனாளிகள் அடங்குவர்.

இதுதவிர எனது சொந்த நிதியிலிருந்து 13 பயனாளிகளுக்கு மடிக்கணினிகள் 58, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும்,6 மாநகராட்சி பள்ளிகளில் தனியார் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூபாய் 40 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் போன்ற உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், உதவி ஆட்சியர் (பயிற்சி) திவ்யான் ஷு நிகம், துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி , மதுரை வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரேமலதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story