திருக்குறள் முற்றோதல் போட்டி : மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு..!
மதுரை ஆட்சியர் சங்கீதா
திருக்குறள் முற்றோதல் போட்டிகளில் பங்கேற்க வருமாறு மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரை:
மதுரை மாவட்டம், திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டியில் கலந்து கொள்வதற்கு மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்மா.சௌ.சங்கீதா தகவல் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் சீரிய கருத்துகளை இளம் தலைமுறையினரின் மனதில் பதியச்செய்து அவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து முழுமையாக ஒப்பிக்கும் திறன் கொண்ட பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறையால், குறள் பரிசாக ரூ:15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், 2024-2025-ஆம் ஆண்டிற்கான குறள்பரிசு வழங்கும் பொருட்டு தகுதியான மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும் மாணவர்களுக்குப் பரிசுத் தொகையாக ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) வழங்கப்பெறும்.
விண்ணப்பங்களை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்திலுள்ள தமிழ் வளர்ச்சித்துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ / www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை, 25.10.2024-க்குள் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகம், உலகத் தமிழ்ச் சங்க வளாகம், மருத்துவர் தங்கராசு சாலை, அரசு சட்டக் கல்லூரி அருகில், மதுரை- 20 என்ற முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ / tamilvalarchimdu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என்று, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu