மதுரை மாநகராட்சிப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி மும்முரம்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணி மும்முரம்
X

மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் பகுதியில் மழை நீரை அகற்றும் பணிகளை ஆய்வு செய்த  மாநகராட்சி ஆணையாளர் 

மழைநீரை உடனடியாக அகற்றுமாறும் மழைநீர் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனுக்குடன் சரி செய்யுமாறும் உத்தரவிட்டனர்

மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரினை அகற்றும் பணிகளை, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகிறது. மதுரை மாநகரில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், வைகை ஆற்றில் தண்ணீர் திறந்த விடப்பட்டு கல்பாலம் மற்றும் தற்காலிகமாக பாலங்களில் போக்குவரத்து செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மதுரையில், நேற்று இரவு பெய்த கனமழையினால் மாநகராட்சியில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர்; தேங்கியுள்ளது. அதன்படி , மண்டலம் எண்.4 வார்டு எண்.99 பகுதிகளான திருப்பரங்குன்றம் பாலாஜி நகர், மகாத்மா காந்திஜி குறுக்கு தெரு, சிதம்பரனார் தெரு மற்றும் அவனியாபுரம் வார்டு 94 ஜே.பி.நகர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தேங்கியுள்ள மழைநீரினை உடனடியாக அகற்றுமாறும், மழைநீர் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புக்களை உடனுக்குடன் சரிசெய்யுமாறும் உத்தரவிட்டனர்.

மதுரை மாநகரில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதால் மழைநீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்களை அருகில் உள்ள பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறினார்கள். அதனைத் தொடர்ந்து, அவனியாபுரம் ஐவத்துனேந்தல் கண்மாய், அயன்பாப்பாக்குடி கண்மாயில் மழைநீர் சீராக வடிந்து செல்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டனர்.

இந்த ஆய்வின்போது, உதவி ஆணையாளர் சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர்கள் குழந்தைவேலு, மயிலேறி நாதன், தேவராஜன், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story