மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் நடைபெறும் பணிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு

மதுரை புறநகர் பகுதிகளில் ஊராட்சிகளில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்.
மதுரை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 35,222 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்.
இது குறித்து ஆட்சியர் மேலும் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில், ஊரக பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 35,222 பணிகள் தேர்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரக பகுதிகளில் உடல் உழைப்பினை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வேலை வாய்ப்பினை அளிப்பதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தினை உயர்த்திடும் நோக்கில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம், ஊரக பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, ஊராட்சி அளவில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளவும் வாய்ப்பாக அமைகின்றது.இத்திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகளுக்கான கட்டடங்கள் கட்டுதல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கட்டடங்கள் கட்டுதல், அங்கன்வாடி மையங்கள், உணவு தானிய இருப்பு கிட்டங்கி அமைப்புகளை கட்டுதல், விளையாட்டு திடல்கள் அமைத்தல், கிராம சந்தைகள் அமைத்தல் மற்றும் பள்ளி கழிப்பிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு பொது உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேபோல, பண்ணைக் குட்டைகள் அமைத்தல், நீராதாரக் குளங்களில் உள்ள மதகு மற்றும் மறுகால் சீரமைத்தல் உள்ளிட்ட நில மேம்பாடு மற்றும் புனரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஊராட்சியிலும், இத்திட்ட விதிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட உள்ள பணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு கிராம சபையில் தீர்மானம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 420 ஊராட்சிகளில் மே-2021 முதல் இதுவரை மொத்தம் 35,222 பணிகள் தேர்வு செய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும், இத்திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரித்திடும் நோக்கில் மரக்கன்றுகள் நடவு செய்தல் மற்றும் குறுங்காடுகள் அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, ரூபாய் 1202.53 இலட்சம் மதிப்பீட்டில் 209 சிமெண்ட் சாலை பணிகள், ரூபாய் 753.71 இலட்சம் மதிப்பீட்டில் 118 பேவர் பிளாக் சாலை பணிகள், ரூபாய் 372.71 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகங்களில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான 46 பணிகள், ரூபாய் 800.85 இலட்சம் மதிப்பீட்டில் 155 தடுப்பணைகட்டும் பணிகள், ரூபாய் 168.11 இலட்சம் மதிப்பீட்டில் சிறு பாலம் அமைக்கும் 5 பணிகள், ரூபாய் 541.26 இலட்சம் மதிப்பீட்டில் 5820 உறிஞ்சு குழிகள் (Soak Pit) உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டத்தில் ரூ.223.42 இலட்சம் மதிப்பீட்டில் 2,16,040 மரக்கன்றுகள் நடவு செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
இப்பணிகளை, துரிதமாக மேற்கொண்டு விரைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu