முதலமைச்சருக்கு நன்றி கூறிய தாட்கோ திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள்

முதலமைச்சருக்கு நன்றி கூறிய தாட்கோ  திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகள்
X

தாட்கோ திட்டம் மூலம் விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை மாவட்டத்தில் தாட்கோ ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப் படுகிறது

மதுரை மாவட்டத்தில் தாட்கோ ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியின மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம்பயன்பெற்ற பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியினை தெரிவித்தனர்.

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை வறுமைக் கோட்டிற்கு மேல் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (TAHDCO) தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு இலவச தீப்பிடிக்காத வீடுகளை இக்கழகத்தின் கட்டுமானப்பிரிவு கட்டிக் கொடுத்தது. பின்னர், தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களுக்கான நிதியுதவியை வழங்கி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் பொருளாதார வளத்தினை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இக்கழகத்தின் செயல்பாடுகள் விரிவடைந்துள்ளன.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை தாட்கோவின் முக்கிய நடவடிக்கைகள் ஆகும். அரசு மானியம் மற்றும் வங்கிகள், தேசிய ஆதி திராவிடர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (NSCFDC) மற்றும் தேசிய மேம்பாட்டு பழங்குடியினர் பொருளாதார கழகம் (NSTFDC) ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடனுதவியுடன் பல்வேறு தேவை அடிப்படையிலான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் இக்கழகத்தால் வகுக்கப்பட்டு மாவட்ட மேலாளர்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், சிறு தொழில், போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் சேவைத் துறை ஆகிய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு மூலதனச் சொத்துக்களை உருவாக்க ஆதி திராவிடர்களுக்கு திட்டத் தொகையில் 30 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.2.25 இலட்சம் இவற்றுள் குறைவான தொகை மானியமாக வழங்கப்படுகிறது. பழங்குடியினருக்கு திட்டத் தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ.3.75 இலட்சம் இவற்றுள் குறைவான தொகையும், அவர்கள் இலகு ரக வாகனம் வாங்கிட ரூ.4.00 இலட்சம் வரையிலும், கனரக வாகனம் வாங்கிட ரூ.5.50 இலட்சம் வரையிலும் மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், தாட்கோ மூலம் நிலம் வாங்கும் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார நிதித்திட்டம், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கான இலவச துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில், 2022-2023-ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்த 545 பயனாளிகளுக்கு ரூ.777.19 இலட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியாக ரூ.2707.69 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் சுய உதவிக்குழுவில் 5 குழுக்களிலுள்ள 60 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு சுய தொழில் தொடங்க ரூ.12.50 இலட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியாக ரூ.34.60 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த 3 பயனாளிகளுக்கு சுயத் தொழில் தொடங்க ரூ.11.50 இலட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியாக ரூ.13.45 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கான இலவச துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் 30 பயனாளிகளுக்கு தாட்கோ மானியமாக ரூ.7.50 இலட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் ஆதிதிராவிடர் மகளிர் புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைத்திட குழு ஒன்றிற்கு பொருட்கள் வாங்கிட ரூ.1.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கால்நடைகளுக்கு தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதைத்தொகுப்பு மற்றும் புல்கறணைகள் பயிர் செய்ய ஒரு பயனாளிக்கு ஏக்கர் ஒன்றிற்க்கு ரூ.10,000/- வீதம் 50 பயனாளிகளுக்கு ரூ.50.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மருத்துவமனை, தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ஸ்டுடியோ கடை, பயணியர் வண்டி, சுமை தூக்கும் வாகனம், வெல்டிங் கடை, டெய்லர், ஆடு, மாடு வளர்ப்பு போன்ற திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தாட்கோ திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளி இராஜகோபால், தெரிவித்ததாவது:மதுரை மாவட்டம், திருமங்கலம் ஊராட்சிய ஒன்றியத்திற்குட்பட்ட, சாத்தங்குடி ஊராட்சியில் வசித்து வருகிறேன். நான் எனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயத் தொழில் செய்து வந்தேன். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு எனது குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. நான் விவசாயத் தொழில் செய்து வந்ததால் எனக்கு டிராக்டர் மூலம் விவசாய நிலங்களை உழவு செய்ய கற்றுக்கொண்டேன்.

தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை உழவு செய்வதற்காக டிராக்டர் வாங்குவதற்கு கடனுதவி வேண்டி விண்ணப்பித்திருந்தேன். எனது, விண்ணப்பத்தினை தாட்கோ மூலம் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 2 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் டிராக்டர் வழங்கினார்கள். தற்பொழுது தாட்கோ மூலம் வங்கியில் கடனுதவி பெற்று வழங்கப்பட்ட டிராக்டரைக் கொண்டு எனது கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களை உலவு செய்யும் தொழில் செய்து மாதம் ரூபாய் 20 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறேன். இந்த டிராக்டர் மூலம் எனது சொந்த நிலங்களை உலவு செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்கிறேன்.

மேலும், எனது விவசாய நிலத்தில் விவசாயம் செய்வதன் மூலம் மாதம் ரூபாய் 7 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறேன். இத்தொகையில் வங்கிக்கு மாத தவணையாக ரூபாய் 8 ஆயிரமும் மற்றும் மீதம் உள்ள தொகையான ரூபாய் 19 ஆயிரத்தைக் கொண்டு என் குடும்பத்தின் பொருளாதாரத்தை நல்ல நிலையில் கவனித்து வருகிறேன்

தாட்கோ திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளி கண்ணன் தெரிவித்ததாவது:

மதுரை மாவட்டம், தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். நான் எனது கிராமப் பகுதியில் கூலி வேலை செய்து வந்தேன். கூலி வேலை செய்து வரும் வருமானத்தைக் கொண்டு எனது குடும்பத்தை நடத்துவது மிகவும் சிரமமாக இருந்தது. தாட்கோ மூலம்செயல்படுத்தப்பட்டு வரும் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களை உலவு செய்வதற்காக டிராக்டர் வாங்குவதற்கு கடனுதவி வேண்டி விண்ணப்பித்திருந்தேன்.

எனது விண்ணப்பத்தினை, தாட்கோ மூலம் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் 2 இலட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் டிராக்டர் வழங்கினார்கள். தற்பொழுது தாட்கோ மூலம் வங்கியில் கடனுதவி பெற்று வழங்கப்பட்ட டிராக்டரைக் கொண்டு எனது கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களை உழவு செய்யும் தொழில் செய்து மாதம் ரூபாய் 15 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என்றார். இந்தத்தகவலை மதுரை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி) ம.கயிலைச் செல்வம் ஆகியோர் தெரிவித்தனர்.

Tags

Next Story