மதுரை அருகே திருமங்கலத்தில் மறு வாக்குப் பதிவு நிறைவு
திருமங்கலம் நகராட்சி 17வது வார்டு பெண்கள் வாக்குச்சாவடியில் நடந்த மறு வாக்குப்பதிவு
திருமங்கலத்தில் மறுவாக்குப்பதிவு நிறைவு:73.55 சதவீதம் வாக்குகள் பதிவு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 17வது வார்டு பெண்கள் வாக்குச்சாவடி மையத்தில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது வாக்கு பதிவு செய்த 127 வாக்காளர்களிடம் கையெழுத்து பெறாமல் வாக்குப் பதிவு செய்யப்பட்டதால் கள்ள ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக திமுக வேட்பாளர் ராஜம்மாள் மற்றும் திமுக நிர்வாகிகள் தேர்தல் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வாக்குச்சாவடி மையத்திற்கு மறுதேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது..
இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நேற்று மாலை முதல் தீவிரமாக நடைபெற்று வந்தது. இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறும் வண்ணம் திருமங்கலம் டிஎஸ்பி சிவக்குமார் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்கு சாவடி மையத்தில் இருந்து 200 மீட்டர் வரை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.மொத்த வாக்குகள் 1781.இதில் ஆண் வாக்காளர்கள் 832 பேர். பெண் வாக்களர்கள் 949 பேர். அதிமுக சார்பில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் உமா, திமுக சார்பில் ராஜம்மாள், பாஜக சார்பில் இருளாயி, நாம் தமிழர் கட்சி சார்பில் சாந்தி என நான்கு பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மறுவாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் கமல் கிஷோர் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டார். 19ம் தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு இடது கை ஆள்காட்டி விரலில் அடையாள மை வைக்கப்பட்டது.மறு தேர்தல் நடைபெறுவதால் இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டனர். காலை முதல் வயதானவர்கள் மற்றும் இளம்வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மதியம் ஒரு மணி வரை விறுவிறுப்புடன் காணப்பட்ட வாக்குபதிவு ஒரு மணிக்கு பிறகு மந்தமாகவே இருந்தது.
இறுதி கட்ட வாக்குப் பதிவில் அசம்பாவிதங்கள் நிகழாத வகையில் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் தலைமையில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.சரியாக மாலை 5 மணிக்கு புது வாக்காளர்களுக்கான வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது தொடர்ந்து 5 மணி முதல் 6 மணிவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் பின்னர் 6 மணிக்கு வாக்குப்பதிவு முழுமையாக நிறுத்தப்பட்டு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வாக்கு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன.
இன்று நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் பெண்கள் வாக்குச் சாவடியில் மொத்தம் 698 வாக்குகள் பதிவாகின. 73.55 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 17வது வார்டு வாக்குச்சாவடியில் மொத்த வாக்குகள் 1781
பதிவான வாக்குகள் 1319. ஆண்கள் 621,பெண்கள் 698.74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அதனைத்தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு இயந்திரம் திருமங்கலம் வாக்கு எண்ணிக்கை மையமான பி.கே. என். பெண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டது. நாளை காலை திருமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu