புள்ளி விவரங்களை அப்படியே படிக்கும் பொம்மை முதல்வர்: முன்னாள் அமைச்சர் கருத்து
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்(பைல் படம்)
புள்ளி விவரங்களை அப்படியே வாசிக்கின்ற ஒரு பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் என்று எடப்பாடி பழனிசாமி கூறுவது உண்மையிலும் உண்மை என்பது நிருபணம் ஆகியுள்ளது என்றார் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார்.
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும்,நலன்களையும் பேணி காத்திடும் வரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3ம் நாள் அனைத்து நாடுகளும் மாற்றுத்திறனாளிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளையொட்டி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டு வருகிறார்.
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பெற்று தன்னம்பிக்கையுடன் உயர்த்திட, எடப்பாடியார் தலைமையிலான ஜெயலலிதாவின் அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1500 மாதாந்திர உதவித் தொகை வழங்குதல், கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயண சலுகை வழங்குதல், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
மேலும் ,பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள், மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட் டவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களிலே பார்வை குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாக சாலையினை கடப்பதற்கு ஏதுவாக குரல் ஒலிப்பான், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் வாழ்க்கையை சிறப்புற அமைக்கும் வகையில் தக்க ஆலோசனை வழங்குவதற்கு, இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் மாநில ஆதார வளமையம் நிறுவியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத் திறனாளிகளின் நல்வாழ்வுக்காக செயல்படுத்தி வந்ததை எல்லாம் இன்றைக்கு எண்ணிப் பார்த்துதான் மாற்றுத்திறனாளிகள் என்றைக்குமே ஜெயலலிதாவின் அரசுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
இந்நிலையில், இன்றைக்கு தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் தெரிவித்த புள்ளி விவரங்கள் தவறானது என்பதைச்சுட்டிக்காட்டி மாற்றுத்திறனாளின் தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளோம் என ,தேசிய பார்வையற்றோர் இணைய கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டிருப்பதை அனைத்து பத்திரிகைகளிலும் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கிறது
அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து 2000 ஆக உயர்த்தப்பட்டதாக கூறியிருக் கிறார்கள். அதிலே, கடும் ஊனமடைந்தவர்களுக்கான 1,500 ரூபாய் உதவித்தொகை மட்டுமே,2000 ரூபாயாக உயர்த்தப் பட்டது. பிறருக்கு உயர்த்தப்படவில்லை. மேலும், ஆயிரம் ரூபாய் வழங்கும் 4 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த உயர்வு வழங்கப்படவில்லை.
தமிழக அரசு 2 லட்சம் பேருக்கு உதவி தொகை உயர்த்தப்பட்டதாக கூறியதும் தவறானது. கடும் ஊனம் அடைந்த 15 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே இந்த உதவி தொகை உயர்த்தப்பட்டுள்ளது. ஆகவே இது ஒரு தவறான புள்ளி விவரத்தை முதலில் தெரிவித்த காரணத்தினால், பொதுமக்களுக்கு தவறான தகவல் கொடுப்பது எங்கள் மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிடும் என்கிற காரணத்தினாலே, எங்களுக்கு உதவிகள் கிடைக்காமல் போகும் என்று மாற்றுத்திறனாளிகள் மனவேதனை அடைந்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத வேலைவாய்ப்பு அறிவிப்பை திமுக அரசு அதை செயல்படுத்த வழி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதை கருத்தில் கொண்டு டிசம்பர் மூன்றாம் தேதி உலக மாற்றுத்திறனாளி தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
முதலமைச்சர் பக்க பக்கமாக தெரிவிக்கும் புள்ளி விவரங்கள் தவறாக வெளியிடப்படுகிறது என்பதை தொடர்ந்து எடப்பாடியார் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அது உண்மைதான்என்பதை இன்றைக்கு மாற்றுத்திறனாளிகள் வெளியிட்டிருக்கிற அறிவிப்பு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முதலமைச்சர் நாட்டு மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொல்வதற்கு தயாராக இல்லை. உண்மையை மறைத்து பொய்யை தான் அவர்கள் இன்றைக்கு மக்களிடத்திலே விதைத்து வருகிறார்கள் என்பதற்கு மாற்றுத்திறனாளிகளின் அறிக்கையை சாட்சியாக இருக்கிறது
நாங்கள் செயல்படுத்திய திட்டங்களை மட்டுமே இவர்கள் செயல்படுத்தி வருகிறார்களே தவிர, புதிய திட்டங்களை அவர்கள் எதுவும் அறிவிக்கவில்லை என்று ஒவ்வொரு நாளும் இந்த அரசுக்கு எதிர்க்கட்சித்தலைவர் தொடர்ந்து நினைவூட்டல் செய்து வருகிறார்.
ஆகவே , தூங்குகிறவரை எழுப்பலாம் .ஆனால் தூங்குவதைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. தூங்குவதைப் போல நடித்துக் கொண்டிருக்கிற திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டும் வெகு தொலைவில் இல்லை. இதுபோன்ற தவறான புள்ளி விவரங்களை வெளியிட்டு மாற்றுத்திறனாளிகளுடைய மனதை வேதனைப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். தனக்கு கொடுக்கப்படுகிற புள்ளி விவரங்களை அப்படியே அவர் வாசிக்கின்ற ஒரு பொம்மை முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார் என்று எடப்பாடியார் சொல்லுவது உண்மை ஆகியுள்ளது என்றார் ஆர்.பி. உதயகுமார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu