முதல்வர் வாழ்க்கை பயண புகைப்படக்காட்சி யை பார்வையிட்ட அமைச்சர்கள், நடிகர் சூரி
முதலமைச்சரின் பொது வாழ்க்கை பயணம் குறித்த ,புகைப்படக் கண்காட்சியினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , திரைப்பட நடிகர் சூரி ஆகியோர் பார்வையிட்டார்கள்:
மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேனேந்தல் மைதானத்தில், தமிழ்நாடு முதலமைச்சர், 70-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சரின் பொது வாழ்க்கை பயணம் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியை, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, திரைப்பட நடிகர் சூரி ஆகியோர் பார்வையிட்டார்கள்.
இப்புகைப்படக் கண்காட்சியினை, பார்வையிட்ட பின்பு திரைப்பட நடிகர் சூரி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர், 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, வாழ்க்கைப் பயணம் குறித்து, மதுரையில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக பிரம்மாண்ட புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், தமிழ்நாடு முதலமைச்சர் தனது சிறுவயது முதல் பொது வாழ்க்கையிலும், அரசியல் தளத்திலும் எதிர்கொண்ட சவால்கள்,
இன்னல்கள் குறித்து இன்றைய தலைமுறையினர் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் தத்ரூபமாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.பொதுவாக, சிறுவயதில் ஆண் பிள்ளைகள் விளையாட்டுப் போட்டிகளிலும், கொண்டாட்ட நிகழ்வுகளிலும் அதிகம் ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர்.
ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர், தனது 14-வது வயதில் கட்சிக்காக பிரச்சாரம் செய்ய தொடங்கி 15-வது வயதில் தி.மு.க இளைஞரணி என்ற அமைப்பை உருவாக்கி 20-வது வயதில் பொதுக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்தார். 36-வது வயதில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு 43-வது வயதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையுடன் சென்னை மாநகராட்சி மேயராக பொறுப்பு வகித்து
”சிங்காரச் சென்னை” என்று அனைவரும் அழைக்கும் வகையில் சென்னை மாநகரில் பல்வேறு உட்கட்டமைப்பு மேம் பாட்டுப் பணிகளை செயல்படுத்தினார். இந்தி எதிர்ப்புப் போராட்டம், எமர்ஜென்சி காலத்தில் மிஷா சட்டத்தில் கைது செய்யப்பட்டு பல போராட்டங்களையும், இன்னல்களையும் கடந்து வந்துள்ளார். அவரது நீண்ட பொதுவாழ்க்கைக்கும், மக்கள் நலனுக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்களால் மக்கள் போற்றும் தலைவராக உயர்ந்து இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இந்த புகைப்படக் கண்காட்சியில், பல்வேறு அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. அந்த வரலாற்றை அறியும்போது மனதளவில் மிகப் பிரமிப்பாக உள்ளது என்றார் திரைப்பட நடிகர் சூரி. இந்த நிகழ்வின்போது, சேடப்பட்டி மு.மணிமாறன் உடனிருந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu