அமைச்சர் தலைமையில் பத்திரப்பதிவுத் துறை எல்லைகள் மறுசீரமைப்பு ஆய்வுக் கூட்டம்

அமைச்சர் தலைமையில் பத்திரப்பதிவுத் துறை எல்லைகள் மறுசீரமைப்பு ஆய்வுக் கூட்டம்
X

மதுரையில் நடைபெற்ற கருத்துக்கேட்புக்கூட்டத்தில் பேசிய வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி

போக்குவரத்து வசதி உள்ள பகுதியில் சார்பதிவாளர் அலுவலகத்தை, அமைப்பதன் மூலம் பொதுமக்கள் எளிமையாக சென்று வருவதற்கு ஏதுவாக இருக்கும்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பத்திரப்பதிவுத்துறையின் சார்பதிவாளர் அலுவலக எல்லைகள் மறுசீரமைப்பு குறித்த கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பத்திரப்பதிவுத்துறையின் சார்பதிவாளர் அலுவலக எல்லைகள் மறுசீரமைப்பு குறித்து கருத்துக் கேட்புக் கூட்டம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் பத்திரப் பதிவுத்துறையில் மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு பதிவு மாவட்டங்களுக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலக எல்லைகள் மறுசீரமைப்பு தொடர்பான வரைவு மதுரை துணைப்பதிவுத்துறைத்தலைவர் அலுவலகம், மாவட்டப்பதிவாளர் அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள், வருவாய்த்துறை அலுவலகங்கள் மற்றும் அனைத்து அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளன. வருவாய் வட்டம், மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் அடிப்படையிலும், பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் மறுசீரமைக்கப்பட உள்ளன. இப்பொருள் தொடர்பான பத்திரப்பதிவுத்துறையின் சார்பதிவாளர் அலுவலக எல்லைகள் மறுசீரமைப்பு குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியை சார்ந்த 18 ஊராட்சிகளை மதுரை மாவட்டம் தெப்பகுளத்தில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல், அழகர்கோவிலிருந்து மேலூர் வரை ஒரு பகுதியையும், திருவாதவூரில் ஒரு பகுதியையும் மற்றும் திருப்பரங்குன்றத்தில் ஒரு பகுதியையும் மதுரை கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த சிட்டம்பட்டடியில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்திலும், மதுரை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட உத்தங்குடியை திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக வசதிக்காக ஒரே தாலுகாவில் 2 மற்றும் 3 சார்பதிவாளர் அலுவலகத்தை ஏற்படுத்துவதால் பட்டா மாறுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவற்றை எளிமையாக கண்டுபிடித்து தீர்வு காண ஏதுவாக அமையும். உச்சம்பட்டி, மஞ்சம்பட்டி, வெளிச்சநத்தம் மற்றும் மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை மதுரை வடக்கு தாலுகாவிற்கு உட்பட்டதாகவும், நிலக்கோட்டைக்கு உட்பட்ட 2 பஞ்சாயத்துக்களை வாடிப்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்டதாகவும் மற்றும் உசிலம்பட்டி, பேரையூர் மற்றும எழுமலை ஆகிய பகுதிகள் பெரியகுளம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்டதாகவும் அமைந்துள்ளது. தனித்தனியாக அமைந்துள்ள இந்த பகுதிகளையெல்லாம் ஒட்டுமொத்தமாக மதுரை மாவட்டத்திற்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில், போக்குவரத்து வசதிகள் உள்ள பகுதியில் சார்பதிவாளர் அலுவலகத்தை, அமைப்பதன் மூலம் பொதுமக்கள் எளிமையாக சென்று வருவதற்கு ஏதுவாக இருக்கும். இதே போல், தமிழ்நாடு முழுவதும் இவ்வகையான வசதிகளுடன் சார்பதிவாளர் அலுவலகத்தை நிறுவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளைச் சார்ந்த மக்கள் தங்களுடைய குறைகளை கூறுவதன் மூலம் அந்த குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய ஏதுவாக அமையும்.

நிர்வாக வசதிக்காக 5 கி.மீ அல்லது 6 கி.மீ தூரத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தை அமைப்பதால், பொதுமக்கள் சென்று வருவதற்கு போக்குவரத்து வசதிகள் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர். வாரத்தில் 5 நாட்கள் பல்லாயிரக்கான மக்கள் சென்று வருவதற்கு ஏதுவாக உள்ள இடத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தை நிறுவ வேண்டும். பொதுமக்களின் வளர்ச்சிக்கும், போக்குவரத்து வசதிக்கும் ஏற்றவாறு சார்பதிவாளர் அலுவலகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், துணை பதிவுத்துறை தலைவர் (மதுரை மண்டலம்) எம்.ஜெகதீசன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில்குமாரி , உதவி பதிவுத்துறை தலைவர்கள் ஆர்.ரவீந்திரநாத் (மதுரை வடக்கு) , என்.ராஜ்குமார் (மதுரை தெற்கு) , சார்பதிவாளர்கள் இ.வேலாயுதம் (சோழவந்தான்),டி.பன்னிருகைவேல் (சொக்கிக்குளம்) , ஆர்.நாகசுப்பிரமணியன் (ஒத்தக்கடை) ,சதீஸ் (தெப்பக்குளம்) ,மீனாட்சி (கள்ளிக்குடி) , அப்துல்சிதிக் (அலங்காநல்லூர்) , நாகராஜன் (கருங்காலக்குடி) , கதிரேசன் (வாடிப்பட்டி) மற்றும்அருள்முருகன் (மேலூர்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!