வணிகர்களுக்கு வரி நிலுவை தள்ளுபடி சான்றிதழ் வழங்கினார் அமைச்சர் மூர்த்தி
மதுரையில் நடந்த நிகழ்வில் வணிகர்களுக்கு நிலுவை வரி தள்ளுபடிக்கான ஆணையை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்.
மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் விருதுநகர் கோட்டங்களைச் சேர்ந்த வணிகர்களுக்கான சமாதானத் திட்டம் - 2023 விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்கக் கூட்டம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
மதுரையில் உள்ள துவாரகா பேலஸ் அரங்கில், வணிகவரித்துறை சார்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் விருதுநகர் கோட்டங்களைச் சேர்ந்த வணிகர்களுக்கான "சமாதானத் திட்டம்- 2023 விழிப்புணர்வு மற்றும் திட்ட விளக்கக் கூட்டம்" நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 4 வணிகர்களுக்கு வரி நிலுவை தீர்வு செய்து ஆணைகள் மற்றும் மதுரை (2) திருச்சி (4) திருநெல்வேலி (2) விருதுநகர் (2) கோட்டத்தைச் சார்ந்த 10 வணிகர்களுக்கு வரி நிலுவை தள்ளுபடி (ரூ.50000க்கு கீழ் உள்ள நிலுவைகள்) ஆணைகளையும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கி பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், வணிகர்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி அளவில் வணிகவரி நிலுவையில் உள்ளது. நிலுவைத் தொகை செலுத்துவதில் சலுகை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு முதலமைச்சர், வணிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
தமிழ்நாட்டில் வணிகர்களின் சுமையை குறைக்கும் வகையில் வரி நிலுவையை எளிய முறையில் வசூலிக்கும் சமாதான திட்டத்தை முத்தமிழறிஞர் கருணாநிதி, முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். அவர்கள் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது ரூ.50000-க்கு கீழ் உள்ள நிலுவைத் தொகைக்கான வணிக வரி, வட்டி, அபராதத் தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும் என, அறிவித்துள்ளார்கள். இதன்மூலம் 95 ஆயிரம் சிறு வணிகர்கள் பயன்பெறுவார்கள். மேலும், ரூ.10 லட்சம் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்கள் 20 சதவிகித வரியை செலுத்தினால் போதும் எனவும் அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் வணிகர்கள் ரூ. 20 ஆயிரம் கோடி அளவில் வரிச்சலுகை பெற்று பயன் பெறுவார்கள். வணிகர்களின் கோரிக்கையை ஏற்று , தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு.
மேலும், வணிகர்கள் செலுத்தும் வரித்தொகைக்கான சான்றிதழ் உடனடியாக வணிகர்களுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,வருகின்ற நவம்பர் 6-ஆம் தேதி சென்னை மண்டலத்திலும் 7-ஆம் தேதி கோயம்புத்தூர் மண்டலத்திலும் இக்கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு எப்போதும் வணிகர்கள் நலனை பாதுகாக்கின்ற அவர்களுக்கு உற்ற துணையாக செயல்படுகின்ற அரசாக விளங்கும்.
இவ்வாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அரசு செயலாளர் வணிகவரி மற்றும் பதிவுத்துறை பா.ஜோதி நிர்மலாசாமி , வணிகவரித்துறை ஆணையர் முனைவர் டி. ஜகந்நாதன் , மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், வணிகவரித்துறை கூடுதல் ஆணையர் தேவேந்திர பூபதி, இணை ஆணையர் மதுரை கோட்டம் இரவி , வணிகவரித்துறை உயர் அலுவலர்கள் மற்றும் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu