மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
சொற்பொழிவாளர் திருக்குமரன்.
*மீனாட்சி திருக்கல்யாணம் தெய்வத்திருமணம்*
*ஆன்மீக சொற்பொழிவாளர் சண்முக திருக்குமரன் பேச்சு.
மதுரை:
மீனாட்சி திருக் கல்யாணம் தெய்வத்திருமணம் என்று போற்றப்படுகிறது ஆன்மீக சொற்பொழிவாளர் சண்முக. திருக்குமரன் பேசினார்.
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் அனுஷ உற்சவம் மதுரை எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் ஆன்மீக சொற்பொழிவாளர் கவிஞர் சண்முக திருக்குமரன் மீனாட்சி திருக்கல்யாணம் என்ற தலைப்பில் பேசினார் அப்போது அவர் பேசியதாவது
இறைவனும் இறைவியும் புருஷனும் பொண்டாட்டியும் ஆகி வாழ்க்கை வாழ்வதை உணர்த்துவது திருக்கல்யாண நிகழ்வு. திருக்கல்யாணத் திருவிழா என்பது மக்கள் புணர்வு போகம் மூழ்க இறைவன் திருமணம் செய்து கொண்டு ஆற்றுப் படுத்தலை குறிக்கும் இறைவன் போகியாய் இருந்து உயிர்களுக்கு போகத்தை புரிகின்றார்.
இறைவன் போக வடிவில் வாழாமல் போனால் உலகத்து உயிர்கள் அனைத்தும் போஹியாய் வாழ இயலாது எனவே இறைவன் திருக்கல்யாணம் புரிவது நமக்காகத்தான்.
அன்னை மீனாட்சி மதுரையிலே எட்டுக்காலம் எட்டு கோலத்தில் நம் கண்களுக்கு காட்சி தருகிறார். தாய்மையின் பூரணத்துவம் பொங்கிடும் கண்களால் நம்மையெல்லாம் கடைத்தேற்றம் செய்யும் ஜெகன் மாதாவாக திகழ்கிறார். திருவனந்தல் விழா பூஜை கால சந்தி உச்சி காலம் சாய்ரச்சை அர்த்த ஜாமம் பள்ளியறை பூஜை என எட்டு காலத்தில் அற்புதமாக மகா சோடசி புவனை மாதங்கி பஞ்சதசாட்சரி பாலா ஷியாமளா ஷோடசி காட்சி கொடுக்கிற இது அனைத்துமே திருமலை நாயக்கர் அமைச்சராக பணிபுரிந்த நீலகண்ட தீட்சிதர் வகுத்து வைத்தது. மனித உடம்பின் பயன் என்பது
இறைவனை அடைவது தானே. அப்படி இறைவனது திருமணம் நமக்கு எல்லாம் சிறப்பான ஒன்று இல்லறத்தின் அவசியத்தை பெருமையை மனிதர்களுக்கு உணர்த்துவதற்காகதான் தெய்வத் திருமணங்கள் நடைபெறுகிறது. தெய்வத்திருமணங்கள் இன்றளவும் கோயில்களில் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் மக்களை நல்வழிப்படுத்துவதற்கும் அவர்களது இல்லற வாழ்க்கையை சிறக்கச் செய்வதற்கும் தான்.
திருக்கல்யாணம் என்பது வெறும் சமயச்சடங்கு அல்ல. அது ஜீவாத்மா பரமாத்மாவோடு இணையும் ஒரு குறியீடு. பசு எல்லாம் வளங்களையும் விளக்கி விட்டு பதிவோடு கூடும் அடையாளம் என்கிறது ஆன்மீக நூல்கள். திருமண வரம் தரும் திருமண வாழ்க்கையிலே இருக்கும் சிக்கல்களை போக்கும் தெய்வத்திருமணங்களில் மீனாட்சி திருக்கல்யாணம் மதுரையில் சித்திரை திருவிழாவில் ஒரு மகுடமாக திகழ்கிறது. மீனாட்சியம்மன் வழக்கமாக நடக்கின்ற திருமணத்தை போல திருமணத்திற்கு முன்பு கன்னி ஊஞ்சலாகி நடைபெறுகிறது.
முத்துராமையர் மண்டகப்படியில் வைத்து தான் தேவாதி தேவர்கள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை நடத்துவதாக ஐதீகம். குலசேகரப்பட்டார் வழி சிவாச்சாரியார் சுந்தரேஷ்வரர் ஆகவும் உக்கிர பாண்டி பட்டர் வழி சிவாச்சாரியார் மீனாட்சி அம்மன் ஆகவும் வேடமிட்டு திருக்கல்யாண மேடையிலே எழுந்தருளுவார்கள். ஈசனும் தான் இருந்த கோலத்திலே திருமண மண்டபத்திற்கு எழுந்துருளாமல் சுந்தரராக அழகு வாய்த்தவராக ஆடை ஆபரணங்கள் பூட்டிக்கொண்டு மதுரை வருகிறார்.
மதுரை மாநகரம் செய்த தவம் தான் யாதோ என சொல்லுகிற அளவிலே வேத மந்திரங்கள் முழங்குகிறது. திருமணத்தில் விநாயகர் பூஜை காப்பு கட்டுதல் பாலிகை பூஜை தாரை பார்த்தல் தங்கம் வெள்ளி பன்னீர் செம்புகள் மூலம் பன்னீர் தெளித்தல் கொன்றை மலர் மாலையுடன் ஆடை சாற்றுதல் மாலை மாற்றுதல் போன்ற நிகழ்வுகள் அழகாக இருக்கிறது.மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்றால் சொல்லும் பொருளுமாக இருப்பவர்கள் என்று பொருள் மீனாட்சி சொல்லாக இருந்தால் சுந்தரேஸ்வரர் பொருளாக இருப்பார் சுந்தரேஸ்வரர் சொல்லாக இருந்தால் மீனாட்சி பொருளாக இருப்பார் சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே என்று அபிராம பட்டர் விவரிப்பார்
திருமணம் என்பது நம் பொருட்டு நடைபெறுகின்ற நம்மை ஆற்றுப்படுத்துகின்ற ஒரு நிகழ்வு மலையத்துவச்சன் பாண்டியன் மகளாகப் பிறந்து எல்லாம் வல்ல சொக்கநாதனையே மணம்முடிக்கின்ற சிறப்பு வேறு எங்கும் காண முடியாத சிறப்பு. மற்ற தளங்களிலே அவதாரம் செய்கின்ற பார்வதி தேவியை ஈசன் எழுந்தருளி திருமணம் முடித்து மீண்டும் கயிலை மலைக்கு அழைத்துச் சென்று விடுவார் ஆனால் மதுரைம்பதியில் அன்னை மீனாட்சியை திருமணம் முடித்து இங்கேயே தங்கி விடுகிறார் இதுதான் மீனாட்சி திருக்கல்யாணத்தின் சிறப்பான ஒரு அம்சம் திருக்கல்யாண தினத்தன்று திருமணம் செய்வது ,வியாக்கிர பாதர் பதஞ்சலி முனிவருக்கு நடனமாடி வெள்ளியம்பலத்தை தோற்றுவித்தது குண்டோதரனுக்கு அன்னமிட்டது அன்னக் குழி வரவழைத்தது வைகையை வரவழைத்தது இப்படி பல திருவிளையாடல்கள் அரங்கேறுகின்ற ஒரு உன்னத நிகழ்வு.
மீனாட்சி திருக்கல்யாணம் அன்று சொக்கநாத பெருமானுக்கு வாசு வாழை கிரீடம் அணிவிக்கப்படும் இந்த கிரீடத்தில் முத்துக்களும் நீலங்களும் கோமேதகங்களும் மிக அழகாக வரிசையாக பதிக்கப்பட்டிருக்கும் இது திருமண நாள் அன்று மாத்திரம் சொக்கரின் தலையை அலங்கரிக்கின்ற உன்னதமான கிரீடம். இவ்வாறு கவிஞர் சண்முக திருக்குமரன் பேசினார். முன்னதாக ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் விக்கிரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு புஷ்பாஞ்சலி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu