மதுரை மாநகராட்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்

மதுரை மாநகராட்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
X

மதுரை மாநகராட்சி தினக்கூலி, ஒப்பந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஒப்பந்தத்தொழிலாளர் கள் பணிகளைபுறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்

இரண்டு மாதமாக சம்பளம் தராததை கண்டித்து மதுரை மாநகராட்சி தினக்கூலி, ஒப்பந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. மதுரை மாநகராட்சியின் ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் 100 வார்டுகள் 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மதுரை மாநகராட்சியில் செயல்பட்டு வருகிறது. இந்த மண்டல அலுவலகங்களின் கீழ் தினக்கூலி, ஒப்பந்த மற்றும் நிரந்தர பணியாளர்கள் என தினசரி 1000க்கும் மேற்பட்டோர் மதுரை மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை மண்டலம் 3க்கு உட்பட்ட 10 வார்டுகளை சேர்ந்த தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு 2 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என, தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டும் இன்று காலை தூய்மை பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி வருகின்றனர்.

மத்தியிலும் மாநிலத்திலும் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒப்பந்த தொழிலாளர் முறையை ஒழிக்கப்போவதில்லை. அவர்கள் 1970 ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் ஏதேனும் சில பணிகளில் ஒப்பந்த தொழிலாளரை நியமிப்பதற்கு தடை விதித்து உத்தரவு போட்டாலும், நீதிமன்றங்கள் அந்த உத்தரவுகளுக்கு உடனே தடை கொடுத்து விடும் வாய்ப்பு உள்ளது.எனவே, 1970 ஆம் ஆண்டு சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றும், நிரந்தர வேலைகள் எதிலும் ஒப்பந்த முறையில் தொழிலாளர் களை பணி நியமனம் செய்யக் கூடாது என்றும் கோரும் ஒரு மாபெரும் இயக்கமே இன்றயை தேவை என்றனர் தொழில் சங்க நிர்வாகிகள்.

Tags

Next Story