விபத்தில் பெண் உயிரிழப்பு உள்ளிட்ட மதுரை மாவட்ட கிரைம் செய்திகள்
உத்தங்குடியில் தனியார் பஸ் மோதி மொபட் ஓட்டிச் சென்ற பெண் பலியானார்.
விபத்தில் பெண் உயிரிழப்பு
மதுரை ஒத்தக்கடை சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தில்லைக்கரசன் மனைவி சுந்தரி (வயது 39.).இவர், மேலூர் மெயின் ரோடு உத்தங்குடி வழியாக மொபட் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார் . அப்போது, அந்த வழியாக சென்ற தனியார் அவர்மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த சுந்தரி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த விபத்து குறித்து, கணவர் தில்லைக்கரசன் மதுரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார் .போலீசார் பஸ்டிரைவர், தேனி மாவட்டம் வீரபாண்டி முத்து தேவன் பட்டியைச் சேர்ந்த செல்லப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்து, இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாளுடன் ரவுடி கைது
மதுரை ஜெய்ஹிந்த்புரம் சுப்பிரமணியபுரம் காலனியை சேர்ந்தவர் சக்திவேல் மகன் சுரேஷ் என்ற கருவாயன் (வயது 22.) இவர் ஜெய்ஹிந்த் புரம் அண்ணா மெயின் வீதி சந்திப்பில் வாளுடன் பதுங்கி இருந்தார். அப்போது, ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சக்தி மணிகண்டன் போலீசாருடன் அந்த வழியாக ரோந்து சென்றனர். போலீசை கண்டதும் சுரேஷ் என்ற கருவாயன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர் .பிடிபட்ட வாலிபரிடம் சோதனை செய்தபோது அவர் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்தார் .அந்த வாளை பறிமுதல் செய்து சுரேஷ் என்ற கருவாயனை போலீசார் கைது செய்தனர். அவர் எதற்காக வாளுடன் பதுங்கி இருந்தார் என்ன திட்டத்தில் பதுங்கி இருந்தார் என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
மதுரை தெப்பக்குளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருமால் சாமி. இவர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, காமராஜர் சாலையில் உள்ள பள்ளி ஒன்றின் அருகே ஒருவர் லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்தார். அவரை பிடித்து அவரிடம் இருந்து 20 சீட்டுகளை பறிமுதல் செய்தார். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், காமராஜர் சாலை காந்தி போட்டல் சந்து பூந்தோட்ட தெருவைச் சேர்ந்த சீனிவாசன்( 55 )என்று தெரியவந்தது. அவரை போலீசார் கைதுசெய்தனர்.
3 பெண்கள் தற்கொலை
மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் சௌராஷ்ட்ரா முதல் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மனைவி புனிதா( 32.) இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆகிறது. கமலேஸ்வரன் ,அஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர்.புனிதா வில்லாபுரம் பூ மார்க்கெட்டில் பூ கட்டிக்கொடுத்து வியாபாரம் செய்து வந்தார். கணவர் கண்ணன் கட்டிட எஞ்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்குள் பணத் தேவை காரணமாக சண்டை ஏற்பட்டது. இந்த நிலையில் சற்று நேரத்தில் சமாதானம் அடைந்தனர்.இதன் பிறகு கண்ணன் வேலைக்கு சென்று விட்டார். இதைத்தொடர்ந்து தன் படுக்கையறைக்குச் சென்ற புனிதா அங்கு மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணவர் கண்ணன் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து புனிதாவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரை சிம்மக்கல் ஒர்க்க்ஷாப் ரோடு திருவிக தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் மனைவி ஜீவன்யா (28.) இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்க போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து, அவருடைய தந்தை ஆசைக்காளை திலகர் திடல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவன்யாவின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
மதுரை எஸ் எம் எஸ் காலனி காந்திஜி தெரு ஜெ.பி. நகரில் வசிப்பவர் கணேசன். இவரது மனைவி மீனா (வயது 39 )இவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது மீனா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து, மீனாவின் தம்பி சூர்யா எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் தற்கொலை செய்து கொண்ட மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரது சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
முதலாளியை தாக்கிய தொழிலாளி கைது
மதுரை தல்லாகுளத்தில் குடிப்பழக்கத்தை கண்டித்த முதலாளியை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை நரிமேடு செக்கடி தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 36.) இவர் நரிமேட்டில் ஏஜென்சி ஒன்று நடத்தி வருகிறார். நரிமேடு பசும்பொன் தெருவை சேர்ந்த கணேஷ் பாண்டி 40 என்பவர் இவர், ஏஜென்சியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு கடைக்கு வந்து கொண்டிருந்தார். இதை முதலாளி பால்பாண்டி கண்டித்துள்ளார். இந்த நிலையில் கடையின் சாவியை குடிபோதையில், இருந்த கணேஷ் பாண்டி தொலைத்துவிட்டார் .இதனால் மாற்றுச்சாவியை கொண்டு வந்து கடையை திறந்த பால் பாண்டி கணேஷ்பாண்டியை கண்டித்தார். குடிப்பதென்றால் இனிமேல் வேலைக்கு வரவேண்டாம் என்றுகூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த கணேஷ் பாண்டி முதலாளி பால்பாண்டியை ஆபாசமாக பேசி அருகில் கிடந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவம் குறித்து , பால்பாண்டி தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முதலாளியை தாக்கிய தொழிலாளி கணேஷ் பாண்டியை கைது செய்தனர்.
மதுரை திருநகரில் ரியல் எஸ்டேட் அதிபர் வீடுபுகுந்து நகை திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
டிரைவர் கைது
திருமங்கலம் கீழக்கோட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் நாட்டரசன் (33.)இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து கொண்டிருக்கிறார். இவரிடம் கீழக்கோட்டையைச் சேர்ந்த குண்டு மலை மகன் சங்கரமூர்த்தி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.தினமும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது வீட்டின் சாவியை பூட்டி சாமி படத்தின் பின்புறம் வைத்து செல்வது வழக்கம். அவர் இவ்வாறு செய்வது நாட்டரசனுக்கும் அவரது டிரைவர் சங்கரமூர்த்திக்கு மட்டுமே தெரியும்.
இந்த நிலையில் சம்பவத்தன்று முக்கிய நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பீரோவை திறந்து நகை எடுக்கச் சென்றார் நாட்டரசன்.அப்போது அங்கு வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இதனால் அவருக்கு டிரைவர் மீது சந்தேகம் ஏற்பட்டது .அவர் சாவியை வைத்து செல்வது அவருக்கு மட்டுமே தெரியும் என்பதால் அவருக்கு சந்தேகம் வலுத்தது. இதை தொடர்ந்து டிரைவர் சங்கரமூர்த்தி மீது திருமங்கலம் தாலுகா போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் , அந்த நகைகளை டிரைவர் திருடியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu