மதுரையில் மாவட்ட ஆட்சியர் தேசிய வாக்காளர் தினவிழா உறுதிமொழி ஏற்பு
மதுரையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் நாள் தொடங்கப்பட்டது.
18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்காளர்களாக தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திடவும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்பட்டு பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்றைய தினம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர், தலைமையில் தேசிய வாக்காளர் தின விழா நடைபெற்றது.
இந்த விழாவில், மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கல்லூரி மாணவ-மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்துள்ள இளம் வாக்காளர்கள் 10 நபர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகளையும் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறையின் சார்பாக நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி-வினா போட்டி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகளையும் வாக்காளர் சுருக்கத் திருத்தம்-2022 பணிகளில் சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி பாராட்டினார்.
மேலும், 18 வயது பூர்த்தியான அனைவரும் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தேர்தலின் போது தவறாமல் வாக்களித்து தேர்தல் நடவடிக்கைகளில் பொதுமக்கள் தன்னார்வத்துடன் ஈடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில் குமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நடராஜன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஆர்.கிருஷ்ணகுமார் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu