மதுரை மாநகராட்சிக் கூட்டம்: வெளிநடப்பு செய்த அதிமுக உறுப்பினர்கள்
மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் இந்திராணி மற்றும் ஆணையாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது
சொத்து உயர்வை கண்டித்து மதுரை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மேயர் இந்திராணி மற்றும் ஆணையாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநகராட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட பொறியாளர்கள் தொடர்பாக மாமன்றத்தின் ஒப்பதல் பெறுவதற்கான குறிப்பு வழங்கப்பட்டது. இதில், மதுரை மாநகராட்சி மேயருக்கு ஆலோசனைகள் வழங்க, கொள்கைகள், செயல்முறை மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்குதல், ஆய்வுகள் தணிக்கைகள் மற்றும் கூட்டங்கள் ஆகியவற்றில் மேயருடன் கலந்து கொள்ளுதல், அரசுத் துறை மற்றும் உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்களுடன் பணிகள் தொடர்பான மேயர் தெரிவிக்கும் தகவல்களை தகவல் பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அர்ச்சனா தேவி என்பவரை ஊதியமின்றி நியமனம் செய்வதற்கான ஒப்பதல் கோரப்பட்டிருந்து.
இது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், மேயரை தனி நபர் மூலமாக கட்டுப்படுத்தும் முயற்சி எனவும், எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற கேள்வி நேரத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல குழு தலைவர்களின் கேள்விகளுக்கு மேயர் பதிலளிக்காமல் முழுவதிலுமாக மேயரின் கூற்றுபடி என்ற வார்த்தையோடு மாநகராட்சி ஆணையாளரே பதில் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
தொடர்ச்சியாக நடைபெற்ற கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்பு நிதி குறித்து எதிர்கட்சியினர் எழுப்பிய கேள்வியின் போது பதிலளித்த மேயர், மாநகராட்சிக்கு ஆயிரம் கோடி கடன் உள்ளதாக பதிலளித்த நிலையில், ஒப்பந்த பணியாளருக்கான நிலுவைத் தொகை போன்ற நிதிச்செலவினங்கள் இருப்பதால் சிறப்பு நிதியை உயர்த்த வாய்ப்பில்லை என பதிலளித்தார். இதனையடுத்து சொத்து வரி உயர்வை திரும்ப பெறக் கோரி, எதிர்கட்சியான அதிமுக உறுப்பினர்கள், மேயரைச் சூழ்ந்து நின்று முழக்கங்களை எழுப்பினர். இதனை எதிர்த்து திமுகவினரும் முழக்கமிட்டதால் கடும் அமளி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் (அதிமுக) சோலைராஜா பேசுகையில், சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும், உறுப்பினர்களின் கேள்விக்கு மேயர் பதிலளிக்கவில்லை , மேயருக்கான ஆலோசகரை நியமிப்பது தொடர்பாக குறிப்பு இடம் பெற்றது தேவையற்றது. கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை தற்போது முடக்கிவைப்பதாகவும் குற்றம்சாட்டினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu