பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் உதயகுமார்
பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் உதயகுமார்.
பொங்கல் திருநாளையொட்டி மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில் பழனி பாதையாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் அருகே, திருவாலவாய நல்லூரில், மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் தாகம் தீர்க்கவும் பசி போக்கவும் அன்னதான முகாமினை, முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடத்தி வருகிறார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியை, துவக்கி வைத்து அவர் பேசியதாவது:-
உலகெங்கும் வாழும் தமிழர்கள் 8 கோடி பேர்களின் வாழ்வாதாரம் செழிக்க பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகை உழவனுக்கு ஒரு பண்டிகை உழவனுக்கு ஆதாரமாக உள்ள மாட்டிற்கும் காளை இனத்திற்கும் ஒரு பண்டிகை என்று தமிழர் திருநாள் கொண்டாடப்படுகிறது அந்த திருநாளை முன்னிட்டு கடந்த காலங்களில் அ.தி.மு.க. ஆட்சியின் போது ஜெயலலிதா முழு தோகையுடன் கூடிய கரும்பு, சர்க்கரை மற்றும் 1000 ரூபாய் வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2 கோடியே 6 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி சர்க்கரை ரொக்க பணம் 2500 ரூபாய் வழங்கினார். அப்போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு. க. ஸ்டாலின் வீடு தோறும் ஐந்தாயிரம் வழங்க வேண்டும் என்று சொன்னார். ஆனால், தற்போது ஆட்சிக்கு வந்த அவர் அள்ளிக் கொடுப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் கிள்ளி கொடுத்துள்ளார். அதற்கு பல நியாயங்களை சொல்லி மக்களை ஏமாற்றும் பொங்கலாக இது அமைந்து உள்ளது.
இந்த நேரத்தில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி இருந்திருந்தால் ஐந்தாயிரம் வழங்கியிருப்பார் என்று மக்கள் பேசி கொள்கிறார்கள். பொங்கல் பரிசு தொகுப்பிலும் குளறுபடி பொங்கல் பரிசு வழங்குவதிலும் குளறுபடி பொங்கல் அன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியிலும் குளறுபடி உள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முதலாக ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான். ஜல்லிக்கட்டு போட்டியினை, காட்சி பொருளாக மாற்றுகின்ற வேலையில் தி.மு.க. அரசு செயல்படுகிறது. நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்திக் கொள்ளுங்கள் ஆனால், அவனியாபுரம் வாடிவாசல்,அலங்காநல்லூர் வாடிவாசல், பாலமேடு வாடிவாசலில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று இந்த அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
இந்த மாவட்ட அமைச்சராக இருக்கக்கூடிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஜல்லிக்கட்டு போட்டியில், கண்ணாமூச்சி ஆடுகிறார். முதல்வர் அவர்களை அழைத்து வந்து அவரது வீட்டில் கூட நடத்திக் கொள்ளலாம், ஆனால் 1500 ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆசியுடன் பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அம்மா கிச்சன் பேரிடர் காலங்களில் மட்டுமல்ல விழா காலங்களிலும் தொடர்ந்து சேவை புரியும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu