ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளுமா?
சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆறு.
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் சாய்பாபா கோவில் பகுதியில் வைகை ஆற்றில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் குளித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில், பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் பெருகி வருகிறது.இந்த நிலையில் விவசாயத்திற்காக வைகை அணையில் திறந்த நீரானது ஆற்றில் வெள்ளம்போல் வந்து கொண்டுள்ளது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் சாய்பாபா கோவில் பகுதியில் வைகை ஆற்றில் ஆழத்தை உணராமல் பொதுமக்கள் குளித்து வருகின்றனர்.
ஏற்கனவே, இந்த பகுதியில் ஆழம் அதிகமாக உள்ள நிலையில் நீரின் சுழற்சியும் அதிகம் உள்ளது. மேலும் இந்த பகுதியில் குளிக்க சென்றவர்கள் உயிரிழந்தும் உள்ளனர். ஆகையால், நீர்வரத்து குறையும் வரையில் இந்த பகுதியில் பொது மக்களுக்கு குளிக்க தடை விதிக்க வேண்டும் எனவும், சாய்பாபா கோவில் பகுதியில் எச்சரிக்கை போர்டு வைக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
குறிப்பாக, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்டோக்கள், கார்களில் குடும்பத்துடன் பொழுது போக்குக்காக வந்து செல்கின்றனர். இதனால் இந்த பகுதியில் ஆழம் அதிக அளவு உள்ளது தெரியாமல் குழந்தைகளுடன் ஆற்றில் இறங்கி குளிப்பதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. காவல்துறை பொதுமக்களின் நலன் கருதி எச்சரிக்கை போர்டு வைத்து காவலர்களை பாதுகாப்பிற்கு நிறுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் எச்சரிக்கையை மீறி குளித்ததால் பதினேழு வயது சிறுவன் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டான் என்பதை பொதுமக்கள் உணரவேண்டும். மழைக்காலங்களில் இதைப்போன்று ஆற்றில் குளிப்பதை தவிர்க்கவேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu