மாநகராட்சி பணிகள் இனி டி.என்.பி.எஸ்.சி. மூலம் நியமனம் -அமைச்சர் நேரு
மதுரையில் நகர்ப்புற வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.மதுரை, சிவகங்கை மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டது, கூட்டத்தில், அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பெரியகருப்பன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், கார்த்திக் சிதம்பரம், மாநகராட்சி மேயர் இந்திராணி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் கடந்த ஆண்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் எவ்வளவு வளர்ச்சி பணிகள் நடைபெற்று உள்ளன எனவும், நடப்பு ஆண்டில் மேற் கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில்: "மதுரைக்கு ஒரே ஆண்டில் 1000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மதுரையை மேம்படுத்த பல்வேறு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் 167 எம்.எல்.டி தண்ணீர் கொடுக்க வேண்டும், தற்போது 156 எம்.எல்.டி தண்ணீர் மதுரை மாநகராட்சி பகுதிகளுக்குள் கொடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாநகராட்சி பகுதிக்குள் 1200 சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி பகுதியில் சாலை அமைக்க ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் பாதுகாப்புக்காக ரூ. 80 இலட்சம் மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் பணிகளில் மேற் கொள்ளப்படும் பணிகளில் ஒப்பந்த முறை விரைவில் ரத்து செய்யப்படும், மாநகராட்சி பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி மற்றும் நேரடி நியமனம் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யப்படும்" என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu