மதுரையில் கலைஞர் நூலகம் கட்டும் பணி: அமைச்சர்கள் ஆய்வு
மதுரை புதுநத்தம் சாலையில், பொதுப்பணித்துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்“ கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்
மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறையின் மூலம் கட்டப்பட்டு வரும் “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்“ கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தொடர்ந்து, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் , முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர், நினைவினைப் போற்றும் வகையில் அவர்களின் பெயரில் நூலகம் அமைக்க வேண்டும் என்பது, தமிழ்நாடு முதலமைச்சர்கனவு திட்டமாகும். தென் மாவட்டங்களில் இருக்கின்ற ஆய்வாளர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஆரம்பப் பள்ளியில் படிக்கின்ற பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் என, அனைவருக்கும் இந்நூலகம் பயன்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசின் சார்பாக “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம்“ அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், புதுநத்தம் சாலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் கட்டுவதற்கான பணிகள் 11.01.2022-அன்று தொடங்கப்பட்டு இந்த ஓராண்டு காலத்திற்குள் சிறப்பாக சிறப்பாக நடைபெற்றுள்ளது. பெரும்பான்மையான பணிகள் 97 சதவீதமும், சில பணிகள் 100 சதவீதமும் நிறைவடைந்துள்ளது. வரும் 30-ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடையும்.
தமிழகத்தின் முதலமைச்சராக 5 முறை பொறுப்பேற்று மக்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி ஆட்சி செய்த முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் , நூற்றாண்டு விழா வருகின்ற 03.06.2023-அன்று தமிழக அரசின் சார்பாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். வரும் ஜூன் மாதம் 5-ஆம் தேதி கிண்டியில் 1000 படுக்கைகள் கொண்ட உயர்தர சிகிச்சையளிக்கும் மருத்துவமனையை, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், இந்திய குடியரசுத் தலைவர் திறந்து வைக்க உள்ளார்கள்.
அதனை தொடர்ந்து, அதன்பின்பு தமிழ்நாடு முதலமைச்சர், இசைவினைப் பெற்று தேதி உறுதி செய்யப்பட்டு முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகம் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும்.வருகின்ற மே 15-ஆம் தேதிக்கு மேல் நூலகத்தில் புத்தகங்கள் காட்சிப்படுத்துவதற்கு வேண்டிய பணிகளை நூலகத் துறையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, இப்பணிகளையெல்லாம் ஒட்டு மொத்தமாக ஊக்குவிப்பதற்காகவும், விரைந்து செயல்படுத்துவதற்காகவும் இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. என, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், நூலகத்துறை இயக்குநர் இளம்பகவத் , சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, (மதுரை வடக்கு) மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) முதன்மை தலைமைப் பொறியாளர் கே.பி.சத்திய மூர்த்தி, தலைமைப் பொறியாளர் மதுரை மண்டலம் எஸ்.ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளர் ஆர்.வெங்கடாசலம், செயற்பொறியாளர் வி.செந்தூர் மற்றும் பொதுப்பணித்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu