பேருந்தே வராத சோழவந்தான் புதிய பேருந்து நிலையம்..! இப்ப வருமோ..? எப்ப வருமோ..?
சோழவந்தான் பேருந்து நிலையம்.
சோழவந்தான் பேரூந்துநிலையம் முழு பயன்பாட்டிற்கு வராததற்குக் காரணம் அதிகாரிகளின் அலட்சியமே என பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
சோழவந்தான்.
மதுரை மாவட்டம், சோழவந்தானில் மக்கள் தொகையின் பெருக்கத்தை கணக்கில் கொண்டு பேருந்து நிலையத்தை இடித்து, புதிதாக கட்டும் பணியை கடந்த ௬ ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2018ல் தொடங்கப்பட்டது. பல்வேறு தடங்கலுக்கு மத்தியில் கடந்த ஜனவரி மாதம் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திறந்து வைக்கப்பட்டதோடு சரி. பெயர்தான் பேருந்து நிலையம். ஆனால் பெயருக்குக் கூட ஒரு பேருந்து வருவதில்லை. எந்த நோக்கத்திற்காக பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டதோ, அந்த நோக்கம் தற்போது வரை நிறைவேறவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .
அப்போது, சோழவந்தான் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வாடிப்பட்டியில் இருந்து வரும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல போதுமானவசதி இல்லாததால் , தபால் நிலையம் அருகில் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி செல்கின்றனர்.
இதன் காரணமாக, வாடிப்பட்டி செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், மதுரையில் இருந்து வரும் பேருந்துகளும் பேருந்து நிலையம் உள்ளே வந்து செல்வதற்கு சர்வீஸ் சாலைகள் போதுமான அளவில் இல்லாததால், பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் உள்ளதாக, பேருந்து ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்
இதன் காரணமாக, புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகிய நிலையிலும் குறிப்பிட்ட அளவு பேருந்துகளே பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்தில் வெளியூர் பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக சோழவந்தானின் பல்வேறு பகுதிகளுக்கு அங்கும் இங்கும் அலையும் அவல நிலையே உள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகளும் சரி மக்கள் பிரதிநிதிகளும் சரி இது சம்பந்தமாக எந்த ஒரு மாற்று ஏற்பாடுகளும் செய்யாத நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரயில்வே துறையினர் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடிவிட்டனர். இதனால், வாடிப்பட்டி செல்பவர்கள் மேம்பாலத்தை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்.சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து, வெளியே செல்லும் சர்வீஸ் சாலை பேருந்துகள் செல்வதற்கு மிக குறுகிய நிலையில் இருப்பதால் , செல்ல முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். வாடிப்பட்டிக்கு செல்பவர்கள் மற்றும் பசும்பொன் நகர், ஆலங்கொட்டாரம் போன்ற பகுதிகளிலிருந்து, சோழவந்தானுக்கு வருபவர்களுக்கு மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கும் போது, அடிக்கடி விபத்து ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால், அதிகாரிகள் இதில் தீவிர கவனம் செலுத்தி பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக் கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu