மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பாஜக புகார் மனு
மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க திரண்ட பா.ஜ.க. நிர்வாகிகள்.
கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவிற்கு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களை அரசு பேருந்தில் அழைத்து சென்ற பி. டி. ஓ க்கள் ஊராட்சி செயலாளர்கள் மீது ஆட்சியரிடம் பா ஜ கவினர் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார். பா.ஜ.க சுற்றுசூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவராகவும் தாமரை சேவகன் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இவரது தலைமையில் பா. ஜ. க நிர்வாகிகள் மணவாளன், செல்வி, சீதா, கவிதா, கிருஷ்ணன் ஆகியோர் மாநகர் மாவட்ட தலைவர். சுசீந்திரன் ஆலோசனையின் பேரில், மதுரை மாவட்ட ஆட்சியாளர் சங்கீதாவிடம் அளித்த புகார் மனு விவரம்:
கடந்த 15-07-2023 அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் திறக்கப் பட்டது. இதன் விழாவை மதுரை ஆயுதப் படை மைதானத்தில் நடத்தினால், பொது மக்களுக்கு பல பாதிப்புகள் வருமென்று நான் கடந்த மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் நாளில் மனு அளித்திருந்தேன். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை
. நான், கொடுத்த பல மனுக்களுக்கு தங்களால் துரித நடவடிக்கைகள் எடுத்த போதும், இந்த ஒரு முக்கியதுவம் வாய்ந்த பொது மக்கள் நலன் சார்ந்த மனுவிற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லாதது எனக்கு மிகுந்த மனம் வருத்ததை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தற்போது நடந்து முடிந்த கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்களை மதுரை புறநகரில் பணி புரியும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், ஆசை வார்த்தைகள் கூறி இருநூறுக்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளில் கூட்டம் காட்ட அழைத்து சென்றதாக தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளது.
அவ்வாறு அவர்களை அதிகாரிகள் துணையுடன் தி. மு. க நிர்வாகிகள் அழைத்து செல்வது முற்றிலும் மனித உரிமைக்கு எதிரானது ஆகும். எந்த நல்ல நோக்கத்திற்காக மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்ததோ அந்த நோக்கம் இவர்களை போன்ற அரசு அதிகாரிகளால் முற்றிலும் வீணடிக்க படுகிறது.இவ்வாறு செய்வதால் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகளில் ஈடுபடும் தாய்மார்களின் தனி திறமை மற்றும் உண்மையான உழைப்பிற்கு பாதிப்பு ஏற்படுகிறது. கடும் வெய்யிலில் தாய்மார்களையும், குழந்தைகளையும் வாகனங்களில் ஆடு மாடுகள் போன்று ஏற்றி இறக்கி விட்டு சென்றுள்ளார்கள். பெண்களின் மாண்பும் கண்ணியமும் எப்பொழுதும் யாராலும் குலைக்க படக் கூடாது என்பதில் என்னை போன்றவர்கள் உறுதியாக உள்ளோம்.
இது சம்பந்தமாக, கடந்த பத்தாம் தேதி நடைபெற்ற குறை தீர்க்கும் நாளிலும் மாவட்ட கலெக்டரின் வாட்சப் நம்பரிலும் புகார் மனு அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலைக்கு வந்ததாக கணக்கு காட்டி தி. மு. க வினர் தங்களது சுய விளம்பரத்திற்கு அவர்களை பயன் படுத்தி யுள்ளதால் பல லட்சக் கணக்கான ரூபாய் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு பணம் மோசடியாக அரசு அதிகாரிகள் துணையுடன் கையாடல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை பயன் படுத்தி உள்ளதாலும், மாற்று பேருந்துகள் ஏற்பாடு செய்யாததாலும் பொது மக்களின் அன்றாட வழக்கமான பணிகளும், பயணங்களும் தடை பட்டு விட்டது. விவசாயிகள் விளை பொருட்களை உழவர் சந்தை மற்றும் பல்வேறு சந்தைகளுக்கு கொண்டு வழக்கமாக கொண்டு செல்லும் அரசு பேருந்துகளில் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகி போய் விட்டன. தக்காளி விலையும் கிலோவிற்கு கூடுதலாக நாற்பது ரூபாய் அதிகரித்து நூற்று முப்பது ரூபாய்க்கு விற்க பட்டது. இதனால் பொது மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்கெனவே, நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இவ்வாறு இந்த நிகழ்விற்கு இருநூறுக்கும் மேற்பட்ட பேருந்துகள் ஒருநாள் முழுவதும் பயன்படுத்த பட்டிருப்பதால் பல லட்சம் கணக்கான ரூபாய் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு மேலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, இவ்வாறு மத்திய மற்றும் மாநில அரசிற்கு பெரும் நஷ்டம் மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுத்திய அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் அவ்வாறு எடுக்கா விட்டால் அதற்குரிய காரணத்தை நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு ஏதுவாக நியாயமான முறையில் அளிக்கும் படியும் கூறியுள்ளார். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக பா. ஜ. க வினரிடம் உறுதி அளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu