சோழவந்தான் அருகே பெண் தீக்குளிக்க முயற்சி
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, கருப்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் மதுரை கோட்டாட்சியரிடம் புகார் கொடுத்தனர்.
இதன் பேரில், ஆக்கிரமிப்பு இடத்தை கைப்பற்ற அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் ஜேசிபி மூலம் ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர்.
அப்போது அங்கிருந்த பெண் மற்றும் அவருடைய சகோதரிகள் தாங்கள் 50 ஆண்டுகளாக குடியிருப்பதாக கூறி, ஜேசிபி வாகனத்தை மறித்தனர். இதனால், அங்கு கிராம மக்களுக்கும் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ,அங்கு குடியிருக்கும் சுந்தரி என்பவர் வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் கேனுடன் வெளியே வந்து தீக்குளிப்பதாக கூறி மண்ணெண்ணையை உடலில் ஊற்ற முயன்றார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணிடம் உள்ள மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தால், அந்தப் பகுதி ஒரே பதட்டமாக காணப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் பொங்கலுக்குப் பிறகு ஆக்கிரமிப்பை எடுப்பதாக கூறிச் சென்றனர்.
இதுகுறித்து 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருவதாக கூறும் பெண்கள், நாங்கள் எங்கள் தாத்தா பாட்டி காலம் முதல் இந்த வீட்டில் தான் குடியிருக்கிறோம். இதற்காக 50 ஆண்டுகளாக வீட்டு வரி ரசீது மின்சார கட்டணம் உள்ளிட்டதை செலுத்தி வருகிறோம். ஏற்கனவே, இந்த வீட்டின் ஒரு பகுதிக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. மற்றொரு பகுதிக்கு பட்டாவுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அரசுக்கு சொந்தமான இடம் என்று கூறி ஜேசிபி இயந்திரம் மூலம் இடிக்க வந்தனர்.
மேலும், வீட்டிற்குள் இருந்த பொருட்களை எடுத்து வெளியே போட்டு விட்டு, சென்றுள்ளனர். நாங்கள் எவ்வளவோ கேட்டும் ஆர்டிஓ உத்தரவு என்று கூறியும், ஆக்கிரமிப்பு பண்ணி உள்ளீர்கள் என்று கூறியும், வீட்டை இடிக்க முற்பட்டனர். ஏற்கனவே, இந்த வீட்டிற்கு பட்டா கேட்டு ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையில் மனு அளித்துள்ளோம் .
எங்கள் வாழ்வாதாரத்தை காப்பதற்கு எங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். மேலும், இந்த இடம் ஆக்கிரமிப்பில் உள்ளது என்று கூறுவது பொய்யானது. எங்கள் தாத்தா காலம் முதல் இங்குதான் நாங்கள் குடியிருந்து வருகிறோம். ஆகையால், எங்களுக்கு இந்த இடத்தை பட்டா போட்டு தர வேண்டும் அல்லது இதற்கு மாற்றாக வேறு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu