உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றும்: ஆர்.வி. உதயகுமார்
மதுரை மாவட்டம் மாவட்ட கவுன்சில் 16வது வார்டு பதவிக்கு நடைபெறும் தேர்தலில் அதிமுக சார்பில் ஐ.தமிழழகன் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஊர்வலமாக சென்று திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி வீராச்சாமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது,
மதுரை மாவட்ட 16வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு தமிழழகன் போட்டியிடுகிறார். இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஜெ.அரசு கொண்டுவந்த சாதனைத் திட்டங்களை மக்களிடத்தில் எடுத்துச் சொல்வோம். குறிப்பாக மதுரை மாவட்டத்திற்கு பல்வேறு வரலாற்று திட்டங்களை ஜெ.அரசு வழங்கியுள்ளது. அதில் குறிப்பாக திருமங்கலம் தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை வாரி வழங்கப்பட்டுள்ளது.
இந்த 16 வது வார்டில் 57,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அதில் அனைத்து வாக்காளர்களையும் நேரடியாக சந்தித்து வாக்குகளை சேகரித்து அமோக வெற்றி பெறுவோம். திமுக அரசு மக்களிடத்தில் அக்கறை செலுத்தும் என்று நினைத்தார்கள். ஆனால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதை மக்கள் கவனித்து வருகின்றனர். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் கொடுத்த வாக்குறுதியையும், கொடுக்காத வாக்குறுதியையும் நிறைவேற்றி மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தது. ஆனால் திமுக அரசின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை நினைத்து வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே பரிசாக திமுக அரசு அளித்தனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தாய்மார்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று கூறினார்கள். ஆனால் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. கேஸ் மானியம் வழங்கப்படும் என்று கூறினார்கள். அது குறித்து வாய் திறக்க மறுக்கிறார்கள்.
நீட் தேவில் எடப்பாடி முதலமைச்சராக இருந்தபொழுது என்ன சட்ட முயற்சி எடுத்தாரோ திரும்பவும் அதே முயற்சியை திமுக அரசு எடுத்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களிடம் இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால், எடப்பாடியார் எடுத்த நடவடிக்கையை செயல்படுத்தி உள்ளனர். திமுகவின் புதிய நடவடிக்கைகள் எதுவும் மக்களிடத்தில் வரவேற்பை பெறவில்லை. நிதிநிலை அறிக்கையில் பத்தாண்டுகள் கழித்து திமுக அளித்த முதல் பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த உள்ளாட்சித் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் வெற்றியை தேடித் தருவார்கள் என்று அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu