விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம்

மதுரையில், விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
மதுரை பழங்காநத்தம் நேரு நகர் கந்தசாமி தெருவில், மாநகராட்சி கழிவுநீர் தொட்டி உள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் இங்கு மின் மோட்டார் பழுது நீக்கும் பணியில், ஒப்பந்த தொழிலாளர்கள் சிவக்குமார்(44), சரவணகுமார்(30), லட்சுமணன் (33) ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, சிவக்குமார் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தார். அதிர்ச்சியடைந்த மற்ற இருவரும் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி, அவரை மீட்க முயற்சித்தனர்.
இதில் ,அவர்களும் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்தனர். 3 பேரும் வெளியே வர முடியாமல் உயிருக்கு போராடினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து, அக்கம்பக்கத்தினர் திரண்டு, அவர்களை மீட்க முயற்சித்தனர்.
இதில், கழிவுநீர் தொட்டி முழுவதும் விஷவாயு பரவி இருந்தது தெரிந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கழிவுநீர் தொட்டிக்குள் விஷ வாயு அதிகளவில் இருந்ததால், தீயணைப்பு வீரர்களால் உடனடியாக இறங்கி மீட்க முடியவில்லை. பின்னர் ஆக்சிஜன் சிலிண்டர்களின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் மாநகராட்சி உயரதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். கழிவுநீர் தொட்டியில் இருந்து முதலில் மீட்கப்பட்ட சிவக்குமாரை, அவரது அண்ணன் மகன் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர், இறந்து விட்டார் என தெரிவித்தனர். தொடர்ந்து ,லட்சுமணன், சரவணக்குமார் ஆகியோரது உடல்களும் மீட்கப்பட்டன. 3 பேரின் உடல்களும் மதுரை அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைக்கப்பட்டன.
இது தொடர்பாக, ஒப்பந்ததாரர்கள் லோகநாதன், ரமேஷ் மற்றும் விஜயஆனந்த் ஆகியோர் மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இன்று காலை லோகநாதன்(50) மற்றும் ரமேஷை(29) கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக தலா ரூ.5 லட்சத்திற்கான காசோலைகளை, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வழங்கினார்.உடன், மதுரை மாநகர மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu