நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும்: முன்னாள் அமைச்சர்

நிறுத்தப்பட்ட முதியோர் உதவித் தொகையை உடனே வழங்க வேண்டும்: முன்னாள் அமைச்சர்
X

பைல் படம்

கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் 12 லட்சம் பேருக்கு மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கப்பட்டது என்றார்

நிறுத்தப்பட்டுள்ள முதியோர் உதவித் தொகைகளை வழங்கவேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட அறிக்கை: அ.தி.மு.க ஆட்சி க்காலத்தில் முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு மட்டும் 4200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தகுதியுள்ள அனைவருக்கும் வழங்கப்பட்டது . தற்போது தகுதி உள்ளவர்களுக்கு முதியோர் ஓய்வூதிய உதவிதொகை நிறுத்தப்பட்டுள்ளது , போர்கால அடிப்படையில் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஏழை , எளிய சாமானிய மற்றும் ஆதரவற்றோர்களுக்காக முதியோர் ஓய்வூதிய உதவித்தொகைத்திட்டம் வழங்கப்பட்டு வருகிறது . இதில் இலங்கை தமிழர்கள் உட்பட 9 பிரிவினருக்கு வழங்கப்பட்டு வருகிறது . ஆரம்பத்தில் 20 ரூபாயாக தொடங்கப்பட்டது கடந்த 2011 - ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 500 ரூபாய் வழங்கப்பட்டு வந்த முதியோர் ஓய்வூதிய உதவித்தொகையை ரூ 1000 மாக உயர்த்தி வழங்கினார் .

கடந்த 2006-2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் 12 லட்சம் பேருக்கு மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கப்பட்டது . இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ 1200 கோடியாகும் . ஆனால் அம்மா ஆட்சிக்காலத்தில் 32 லட்சம் பேருக்கு மாதந்தோறும் 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது . இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ 4200 கோடியாகும் . ஆக கூடுதலாக 3000 கோடி நிதி அம்மா ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்டது என்பதை அரசு ஆவண அடிப்படையில் இத்துறையின் முன்னாள் அமைச்சர் என்கிற முறையில் நான் தெரிவிக்க விரும்புகிறேன் .

அதுமட்டுமல்லாது இத்திட்டத்திற்காக அம்மா ஆட்சிக்காலத்தில் கட்டணமில்லா தனி சேவை மையம் உருவாக்கபட்டது . இதன்மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டது . அதேபோல் தகுதி இல்லாதவர்களுக்கு உரிய காரணங்களும் தெரிவிக்கப்பட்டது . மேலும் ஆதார் அட்டைகள் இதன் மூலம் இணைத்து இரட்டைப்பதிவுகள் நீக்கப்பட்டன . மேலும் இறந்தவர்கள் , போலியான நபர்களை நீக்கம் செய்யப்பட்டது . குறிப்பாக மாண்புமிகு எடப்படாடியார் தலைமையிலான ஒ.பி.எஸ் அவர்களின் வழிகாட்டுதலோடு நடைபெற்ற அம்மா ஆட்சிக்காலத்தில் பல்வேறு விதிகள் தளர்த்தப்பட்டது . 50,000 ரூபாய் சொத்து மதிப்பு இருந்ததை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தியும் , ஆண் வாரிசு இருந்தாலும் வறுமையில் இருந்தால் வழங்கலாம் என்றும் மாற்றுத்திறனாளிகள் 60 % குறைபாடு இருந்ததை 40 % குறைபாடு இருந்தாலும் வழங்கலாம் என்று விதி தளர்த்தப்பட்டது .

மேலும் அம்மா ஆட்சிக்காலத்தில் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் 38 வருவாய் மாவட்டங்களில் நடத்தி மனுக்கள் பெறப்பட்டது . அதன் மூலம் கூடுதலாக 5 லட்சம் நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை வழங்க அரசானை வெளியிட்டு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது . மக்களை தேடி அரசு என்ற அம்மா சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 62 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு அதற்கு தீர்வு காணப்பட்டது .

தற்போது உள்ள அரசு தகுதியுள்ள ஏழை எளிய மக்கள் பெற்று வந்த முதியோர் உதவித்தொகையை காரணம் இல்லாமல் நிறுத்தி வருகிறது . கடந்த 10 வருடங்களாக பெற்றுவந்தோர்களுக்கு தற்போது நிறுத்தி வைக்கபட்டுள்ளது குறிப்பாக கடந்த தி.மு.க தேர்தல் அறிக்கையில் முதியோர் உதவித்தொகையை உயர்த்தி வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு தற்போது ரத்து செய்திருப்பது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது . ஆகவே முன்னாள் முதலமைச்சர்கள் மாண்புமிகு எடப்பாடியார் மாண்புமிகு ஒ.பி.எஸ் . ஆகியோர்களின் வழிகாட்டுதல்படி அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.அரசு போர்கால நடவடிக்கை மேற்கொண்டு தகுதி உள்ள அனைவருக்கும் மீண்டும் முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை வழங்க வேண்டும் என்றார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி